(இராஜதுரை ஹஷான்)
தீ விபத்துக்குள்ளான எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் நாட்டின் கடல் வளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை இரண்டு வார காலத்திற்குள் மதிப்பீடு செய்ய முடியும். கப்பலை ஆழ்கடல் பகுதிக்கு கொண்டு சென்றால் ஏற்படவிருக்கும் பாதிப்புக்களை சற்று குறைவாக்கலாம் என தேசிய நீர்வள வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்னராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தீ விபத்துக்குள்ளாகியுள்ள சரக்கு கப்பலிருந்து பல இரசாயன பதார்த்தங்கள் கடலில் கலந்துள்ளன. கப்பலின் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பல கரையொதுங்கியுள்ளன. இவற்றை அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
இக்கப்பலினால் சமுத்திர வளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை இரண்டு வார காலத்திற்குள் மதிப்பீடு செய்ய முடியும். தீ விபத்தினால் கப்பல் முழுமையாக சேதமடைந்துள்ளது.
கப்பலை ஆழ்கடல் பகுதிக்கு இழுத்து செல்லும்போது கப்பலின் பின்பகுதி கடலில் மூழ்க ஆரம்பித்தது. ஆகையால் அப்பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கப்பலை ஆழ்கடல் பகுதிக்கு இழுத்து செல்லும் நடவடிக்கை மேலும் தாமதமடையும்.
எவ்வாறாயினும் கப்பலை ஆல்கடலுக்கு இழுத்து சென்றால் மாத்திரமே கடற்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைவாக்க முடியும்.
தீ விபத்துக்குள்ளாகிய பேர்ள் கப்பலில் இருந்து வெளியாகிய கழிவுகள் மற்றும் இரசாயன பதார்த்தங்கள் புத்தளம் தொடக்கம் காலி வரையிலான கடற்கரை பிரதேசங்களில் கரையொதுங்கியுள்ளன.
இவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. முதலில் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளின் பெறுபேறுகளும் தற்போதைய மாதிரிகளின் பெறுபேறும் வேறுபட்டவையாக காணப்படுகின்றன.
கப்பலில் உள்ள இரசாயன பதார்த்தங்கள் மற்றும் எத்தனை மெற்றிக் தொன் எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன என்பதை குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை.
சுமார் 320 மெற்றிக் தொன் எண்ணெய் கப்பலில் உள்ளது என்று தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது. கப்பல் நங்கூரமிட்டிருந்த பகுதியில் இருந்து மணல் மற்றும் நீர் ஆகியவற்றின் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு அவை பரிசீலனை செய்யப்பட்டன. தற்போதைய நிலைக்கு அமைய கடல் நீரில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என்று குறிப்பிட முடியும் என்றார்.
No comments:
Post a Comment