நாட்டின் பொருளாதாரம் தற்போது மிகவும் மோசமடைந்திருக்கும் அதேவேளை, அரசாங்கத்தினால் கூறப்படும் தரவுகளுக்கு மாறானதாகவே உண்மை நிலைவரம் இருக்கின்றது. இதற்கு தற்போது எம்மிடம் எஞ்சியுள்ள ஒரே தீர்வு சர்வதேச நாணய நிதியமேயாகும். இந்தியா, சீனா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் பரிமாற்ற அடிப்படைப்படையிலான நிதியுதவியைப் பெறுவதென்பது தற்காலிக தீர்வாக அமையுமேயன்றி, பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கு அவை உதவாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதேவேளை தற்போதை நிலைவரத்தில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி நிதியுதவிகளைப் பெறுவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலுடனான நெருக்கடி நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பான குழுக்கலந்துரையாடலொன்றில் நேற்று ஞாயிறுக்கிழமை கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இளைய சமுதாயம் முகங்கொடுத்திருக்கும் மிக முக்கிய பிரச்சினை, அவர்களது கல்விச் செயற்பாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் இடையூறாகும்.
எனக்கு 17 வயதான மகளொருவர் இருப்பதனால், தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது. அதுமாத்திரமன்றி இந்த விடயத்தில் நாட்டின் ஏனைய பாகங்களிலுள்ள மாணவர்கள் எத்தகைய சிக்கல்களை எதிர்நோக்குவார்கள் என்பதையும் சிந்தித்துப்பார்க்க முடிகின்றது.
ஆகவே ஒன்லைன் மூலம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது, அனைத்து மாணவர்களிடமும் அதற்கான வசதிகள் இருக்கின்றனவா? என்பது குறித்து சிந்திப்பது அவசியமாகும். எனவே ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளுக்கு மாற்றாக, தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலம் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
அடுத்ததாக கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையும் தற்போது முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கலுக்காக வாக்குச்சீட்டையும் தடுப்பூசி வழங்கப்படும் இடம் மற்றும் நேரம் ஆகிய விபரங்களைப் பகிர்வதற்கு குறுஞ்செய்தி சேவையையும் பயன்படுத்துவதே எனது தெரிவாகும். ஆனால் தற்போது சில அரசியல்வாதிகள் தடுப்பூசியைப் பெறுவதற்கான அட்டையை வீடுகளுக்குச் சென்று விநியோகித்து, தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு முனைகின்றார்கள்.
தற்போது ஒருவர் மீதொருவர் பழிசுமத்தி, இலாபமடைவதில் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும் உண்மையில் அக்கறையுடைய அரசாங்கமெனின் தடுப்பூசிகளுக்கான கோரிக்கைகளை அனுப்பத் தொடங்கிய காலத்திற்கு சுமார் 5 - 6 மாதங்கள் முன்பதாகவே அதனைச் செய்ய ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் தடுப்பூசிகளுக்கான கோரிக்கையைக் கடைசியாக அனுப்பிய தெற்காசியநாடு இலங்கையாகும்.
அடுத்ததாக நாட்டின் சனத் தொகையில் 30 வயதை விடக் குறைந்தவர்களுக்குத் தடுப்பூசியை வழங்குவதற்கு இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனின், அவர்களுக்கு எப்போது தடுப்பூசி வழங்கப்போகின்றோம்? சிறுவர்களும், இளைஞர், யுவதிகளும் கூட இந்தத் தொற்றுநோயினால் மரணமடைகின்றார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
அதேபோன்று நாட்டில் அன்றாட ஊதியம் பெறும் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையானோர் இருக்கின்றார்கள். வறிய குடும்பங்கள் இருக்கின்றன. எனவே இ;வ்வாறானதொரு நெருக்கடியான தருணத்தில் அவர்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளக்கூடிய நிலையில் இருக்கின்றார்களா? என்பதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
அடுத்ததாக சிறிய மற்றும் நடுத்தரளவான வணிகங்கள் தற்போது வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் அவற்றின் கடன்களையும் குத்தகைப் பணத்தையும் மீளச்செலுத்த முடியாத நிலையிலிருக்கின்றன. இதற்கான தீர்வாக மத்திய வங்கியின் ஊடாக அரசாங்கத்தினால் நிதியுதவிகள் வழங்கப்பட்டாலும், அவற்றின் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட முடியாதவையாக இருக்கின்றன.
இந்த நெருக்கடிகளுக்கான தீர்வை வழங்குவதற்கு அரசாங்கத்திடம் போதியளவான நிதி இல்லை என்பதைப் புரிந்துகொள்கின்றோம். ஆனால் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதிக் கட்டமைப்புக்களுடன் அரசாங்கம் பேச்சவார்த்தைகளை முன்னெடுத்து நிதி அல்லது கடனுதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கடந்த காலங்களில் இவ்வாறான நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டபோது அரசாங்கங்கள் இத்தகையை நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றன. நாம் இப்போது அனைத்துக் கட்டமைப்புக்களும் சீர்குலைந்த நிலையிலிருக்கின்றோம்.
நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்திருக்கும் அதேவேளை, அரசாங்கத்தினால் கூறப்படும் தரவுகளுக்கு மாறானதாகவே உண்மை நிலைவரம் இருக்கின்றது. இதற்கு தற்போது எம்மிடம் எஞ்சியுள்ள ஒரே தீர்வு சர்வதேச நாணய நிதியமேயாகும்.
இந்தியா, சீனா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் பரிமாற்ற அடிப்படைப்படையிலான நிதியுதவியைப் பெறுவதென்பது தற்காலிக தீர்வாக அமையுமேயன்றி, பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கு அவை உதவாது.
நாட்டின் பொருளாதாரநிலை தொடர்பில் நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மோசடி இடம்பெற்றிருந்ததை அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தேன். சிலரை சில வேளைகளில் முட்டாளாக்க முடியும். ஆனால் எல்லோரையும் எப்போதும் முட்டாளாக்க முடியாது என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்பதுபோல பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும் பிம்பத்தில் எவ்வித உண்மையும் இல்லை. அரசாங்கத்தின் வருமானம் பெருமளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. அதன் காரணமாக எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. விரைவில் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கும்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிகளில் 80 சதவீதமானவை கடன்களுக்கான வட்டியை மாத்திரம் மீளச் செலுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்தத் தொற்றுப்பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாம் பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும்.
அதுமாத்திரமன்றி பல்வேறு துறைகளிலும் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எனினும் அதற்காக மீண்டும் 1970 - 1977 வரையான காலப்பகுதியில் காணப்பட்ட கொள்கைகளுக்கு மீளத்திரும்ப முயற்சிப்பதென்பது பாரிய அழிவிற்கே வழிவகுக்கும்.
No comments:
Post a Comment