இலங்கையின் கடல் வளத்திற்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

இலங்கையின் கடல் வளத்திற்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி

(செ.தேன்மொழி)

எக்ஸ்ரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்திற்குள்ளானமையால் இலங்கையின் கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹெக்ட்டர் அப்புஹாமி, காவிந்த ஜயவர்தன மற்றும் திலீப் வெத ஆராச்சி ஆகியோரால் நேற்று  செவ்வாய்கிழமை இவ்வாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதனூடாக சூழலும் மாசடைந்துள்ளது. அதனை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை விடுப்பதற்காகவே நாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியுள்ளோம். 

இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் எமக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கப்பலின் தீப்பரவல் காரணமாக கடலுக்கு மாத்திரமின்றி அதனை அண்மித்த சூழலும் பாரியளவில் பாதிப்படைந்துள்ளது. இதனால் மீனவர்கள் தங்களது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது

இதேவேளை, மீன்களை உண்பது தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது. அந்த அச்சத்தை போக்குவதற்காவது அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதனையும் செய்யாமல் உள்ளது. 

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு வாழ்வாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கு 5000 ரூபாய் நிவாரண நிதியை வழங்துவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இந்த தொகை அவர்களுக்கு போதுமானதாக அமையாது. அவர்கள் அதனையும் விட அதிகமான வருமானத்தை பெற்றுக் கொள்வார்கள். மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள இந்த நெருக்கடிகளுக்கு உடனடியாக தீர்வொன்றை வழங்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும், கப்பல் வந்த விதம் தொடர்பில் எமக்கு பல்வேறு கேள்வியுள்ளது. அது ஒரு சூழ்ச்சியாகவும் அமையலாம். ஆனால், இதன் காரணமாக அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெறும் நட்ட ஈட்டை அல்லது கப்பலில் உள்ள பொருட்களை விற்பனை செய்வதன் ஊடாக கிடைக்கப் பெறும் பணத்தை, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இந்த கப்பல் விவகாரம் காரணமாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad