அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற்படுத்த பிரதமர் உத்தரவு : நல்லாட்சியில் கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கான பணம் இதுவரை அறவிடப்படவில்லை - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற்படுத்த பிரதமர் உத்தரவு : நல்லாட்சியில் கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கான பணம் இதுவரை அறவிடப்படவில்லை

நல்லாட்சி அரசாங்கத்தின் திறனற்ற முகாமைத்துவம் மற்றும் நிதி முறைகேடு காரணமாக இழப்புகளை எதிர்கொண்டுள்ள அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்தார்.

இலங்கை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய நிலை குறித்து நேற்று (10) அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனம் மூலம் பல திட்டங்கள் தன்னிச்சையாக செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதும், அதன் மூலம் கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கான ரூபாய் பணம் இதுவரை பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் இன்னும் அறவிடப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

சிறிகொத்த கட்சி தலைமையகத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் சேவைகள் பெறப்பட்டுள்ளன என்றும், அதற்கு இதுவரை எந்த கட்டணமும் செலுத்தப்படவில்லை என்றும் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் தகுதிகள் இல்லாமல் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளை வழங்கியமையால் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் ஆரம்பித்த பல அபிவிருத்தி திட்டங்கள் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டமையால் அந்த அபிவிருத்தி பணிகள் நிறுத்தப்பட்டு பொறியியல் கூட்டுத்தாபனம் ஸ்தம்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

பேலியகொட சீ சிட்டி (C City) சந்தை வளாகம் இவ்வாறு கைவிடப்பட்ட ஒரு வேலைத்திட்டம் என இங்கு வெளிப்படுத்தப்பட்டது. 

பிரதமரின் கட்டளைக்கமைய கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக அனுருத்த மற்றும் பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ ஆகியோரின் மேற்பார்வையில் குறித்த சந்தை வளாக நடவடிக்கை அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயல்படுத்துவதில், இதுவரை நிறுத்தப்பட்ட திட்டங்களைத் ஆரம்பிக்க பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒரு பொதுவான முடிவை எடுக்க வேண்டும். தேவையான நிதி உதவி குறித்து சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பிரதமரிடமிருந்து கிடைத்த நேர்மறையான பதிலை தொழிற்சங்க பிரதிநிதிகள் பாராட்டினர்.

'இன்றைய விவாதம் பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு மிகவும் அதிஷ்டமான நேரம் வருவதைக் காட்டுகிறது. தற்போதுள்ள கடன்களை திருப்பிச் செலுத்த ஒரு திட்டம் விவாதிக்கப்பட்டது. இப்போது எங்களுக்கு ஒரு கூட்டு பொறுப்பு உள்ளது. எங்களை பணியிடத்திலிருந்து நீக்கிய நல்லாட்சி பின்னர் ஒரு கொடிய ஆட்சியாக மாறியது. அவர்களிடமிருந்து ஒரு அரசு நிறுவனம் கூட தப்பவில்லை. எனவே, இந்த கலந்துரையாடலுக்குப் பின்னர், நாங்கள் நாளை முதல் பணியிடத்திலிருந்து பணியிடத்திற்கு செல்வோம்' என்று கூட்டு தொழிற்சங்க மையத்தின் தேசிய அமைப்பாளர் பிரேமலால் பெரேரா கூறினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் காமினி லொகுகே, இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன, இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி ரத்னசிறி களுபஹன உள்ளிட்ட அரச நிறுவனத் தலைவர்கள் மற்றும் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad