நாட்டைக் கட்டியெழுப்ப ரணில் ஜனாதிபதியாக வேண்டும் : ஐக்கிய மக்கள் சக்தியினுடைய நடவடிக்கைகள் அதற்கேற்றவாறுதான் அமைந்துள்ளன - பாலித ரங்கே பண்டார - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 23, 2021

நாட்டைக் கட்டியெழுப்ப ரணில் ஜனாதிபதியாக வேண்டும் : ஐக்கிய மக்கள் சக்தியினுடைய நடவடிக்கைகள் அதற்கேற்றவாறுதான் அமைந்துள்ளன - பாலித ரங்கே பண்டார

(நா.தனுஜா)

ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருப்பதன் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. மாறாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர் ஜனாதிபதியாக வேண்டும். நாம் அதற்குரிய நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது எம்மிடம் ரணசிங்க பிரேமதாஸவின் ஜனன தினத்தை நினைவு கூரவில்லையா என்று கேள்வி எழுப்புகின்றார்கள். கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பிரிவினர் ரணசிங்க பிரேமதாஸவிற்கு எதிராகக் குற்றப் பிரேரணையைக் கொண்டுவந்தபோது ரணில் விக்கிரமசிங்கவின் மூலமாகவே அந்தப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டு, ரணசிங்க பிரேமதாஸ காப்பாற்றப்பட்டார்.

அந்த வகையில் இன்று பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும்போது ரணசிங்க பிரேமதாஸவை நினைவு கூர்வார். அவரின் ஜனன தினத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் நினைவு கூர்வதற்கான நடவடிக்கைகளையே ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டுள்ளது.

அடுத்ததாக கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தொடர்பிலும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கட்சிக்கு அப்பால் சென்ற உறுப்பினர்கள் இருக்க முடியாது. அந்த வகையில் கட்சியின் யாப்பிற்கு எதிராக செயற்பட்டவர்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் யாப்பை மீறி செயற்படக் கூடியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

முறையற்ற விதத்தில் செயற்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அவர்களது தவறை உணர்ந்து திருத்திக் கொண்டு மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கான கால அவகாசத்தை வழங்கியிருந்தோம். அதற்கேற்ப கட்சியுடன் மீண்டும் இணைந்து செயற்பட விரும்புபவர்களை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை, தொடர்ந்தும் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயற்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கம்பளை மாநகர சபை உறுப்பினர்கள் எமது கட்சியுடன் இணைந்து கொண்டதைப்போன்று, மேலும் சில மாநகர சபை உறுப்பினர்கள் எம்முடன் இணைவதற்குத் தயார் நிலையில் இருக்கின்றார்கள்.

அடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியை வலுவிழக்கச் செய்வதே எமது நோக்கம் என்று சிலர் கூறுகின்றார்கள். ஆனால் அக்கட்சியை வலுவிழக்கச் செய்வதற்கான செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கத் தேவையில்லை. மாறாக அவர்களுடைய நடவடிக்கைகள் அனைத்தும் அதற்கேற்றவாறுதான் அமைந்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பிளவடையச் செய்து புதிதாக உருவாக்கப்பட்ட எந்தவொரு கட்சிகளும் சிறப்பாக செயற்பட்டதில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய அனைத்துக் கட்சிகளும் அந்தப் பட்டியலிலேயே அடங்குகின்றன.

ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருப்பதன் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. மாறாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர் ஜனாதிபதியாக வேண்டும். நாம் அதற்குரிய நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றோம். 

அவர் ஜனாதிபதியாகாவிட்டால், நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்படும். நடப்பது சாத்தியமில்லை என்று நினைக்கும் விடயங்கள் இப்போது சாத்தியமாகிக் கொண்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad