அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் விலையை அதிகரிக்க அனுமதியளிக்குமாறு இறக்குமதியாளர்கள் கோருகின்றனர் - அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Saturday, June 19, 2021

அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் விலையை அதிகரிக்க அனுமதியளிக்குமாறு இறக்குமதியாளர்கள் கோருகின்றனர் - அமைச்சர் பந்துல

உலகம் முழுவதும் உணவு உற்பத்திகளுக்கு நெருக்கடியாகியுள்ள இன்றைய கால கட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு இறக்குமதியாளர்கள் அரசாங்கத்தை கோருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், முழு உலகிலும் விநியோக வலையமைப்பு மற்றும் உற்பத்தி செயற்பாடுகள் சீர்குலைந்துள்ளன. கப்பல் கட்டணமும் வெகுவாக அதிகரித்துள்ளது. கொள்கலன்களுக்கான கட்டணம் 300 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் உலகம் முழுவதும் உணவு உற்பத்தி நெருக்கடி நிலவுகிறது. அதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் குறைக்கக் கூடிய பொருட்களுக்கு உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விலைகளை குறைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை பால் மாவின் விலை யை அதிகரிக்க அனுமதி தருமாறு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்தை கோரியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவிற்கான விற்பனை விலையை 350 ரூபாவாகவும், 400 கிராம் பால் மா பக்கற் ஒன்றுக்கு 140 ரூபா விலை அதிகரிப்பையும் அந்த சங்கம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியுள்ளது. 

அது தொடர்பில் கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, அனைத்து பொருட்களையும் தனியார் துறையினரே இறக்குமதி செய்கின்றனர். அந்த வகையில் உலகச் சந்தையில் விலை அதிகரிப்பு ஏற்படும் போது அவர்களின் விலை அதிகரிப்பை மேற்கொள்ள அனுமதி கோருகின்றனர்.

அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் பொருட்கள் இறக்குமதியை நிறுத்திவிடுவர். அப்போது உள்நாட்டில் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவும்.

அரசாங்கம் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உலக நிலைமையையும் நாட்டின் நிலைமையையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தி குறைக்க முடிந்த பொருட்களின் விலைகளை முடிந்தளவு குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment