(எம்.மனோசித்ரா)
கொவிட் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுகின்றமையால் உண்மையான தரவுகள் மறைக்கப்படுகின்றன. எனவே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட முன்னிலை சுகாதார தரப்பினரை உள்ளடக்கியதாக புதிய கொவிட் செயலணி நியமிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கொவிட் தொற்று என்பது மருத்துவதுறையுடன் தொடர்புடைய பிரச்சினையாகும். எனவே இதனுடன் தொடர்புடைய விவகாரங்களில் வைத்தியர்களுக்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும். ஆனால் நாட்டில் அவ்வாறு இடம்பெறுவதில்லை.
கொவிட் தொடர்பான தரவுகள் பிழையாகவுள்ளதாக ஜனாதிபதி சுகாதார தரப்பினருடனான சந்திப்பில் தெரிவித்தார். அதற்காக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளருக்கு இடமாற்றமும் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள கொவிட் செயலணிக்கு உண்மையான தரவுகளைக்கூட சேகரிக்க முடியவில்லையெனில் அவர்களால் எவ்வாறு இதனைக் கட்டுப்படுத்த முடியும்? எனவே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் உள்ளிட்ட முன்னிலை சுகாதார அதிகாரிகளை உள்ளடக்கி புதிய செயலணியை ஸ்தாபிக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
தற்போதுள்ள சுகாதார தரப்பினர் அரசாங்கத்தால் எடுக்கப்படும் தீர்மானங்களை அறிவிப்பவர்களாகவே மாத்திரமே உள்ளனர். கொவிட் தடுப்பு செயலணி அரசியல் நோக்கங்களுக்காகவே செயற்படுகிறது. கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைவாகக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை குறைக்க அரசாங்கம் தீர்மானித்தது. அதனை கொவிட் செயலணி நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஆரம்பத்தில் 28000 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட போது 3500 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 50 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நாளாந்தம் 14000 பி.சி.ஆர். பரிசோதனைகளே முன்னெடுக்கப்படுகின்றன. அதன் காரணமாகவே 1800 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இது நாட்டின் உண்மை நிலைவரம் அல்ல. அரசியல் தேவைக்காக கொவிட் செயலணி உண்மையை நிலைமையை மறைக்கிறது என்றார்.
No comments:
Post a Comment