(ஆர்.யசி)
நாட்டில் கைவிடப்பட்ட காணிகளை சீனாவுக்கு விற்கவோ அல்லது வேறு விதங்களில் கொடுக்கவோ நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்கவில்லை, எனினும் கைவிடப்பட்ட சில பகுதிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதென நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டு மக்களுக்கான வீட்டுத் திட்டமொன்றை உருவாக்கிக் கொடுக்கும் விதமாக நடுத்தர வருமான மற்றும் அடிமட்ட வருமானத்தை பெரும் மக்களுக்கான வீடுகளை சலுகை அடிப்படையில் பெற்றுக் கொடுத்தல் மற்றும் நகர அலங்காரம், நடைபாதை அபிவிருத்தி என்பவற்றையும், தெரிவு செய்யப்பட்ட பின்தங்கிய நூறு கிராமங்களை தெரிவு செய்து அவற்றை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பில் மாத்திரம் 24 வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக பத்தாயிரத்திற்கும் அதிகமான வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அத்துடன் 22 நடைபாதை அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. வெவ்வேறு மாவட்டங்களில் நகர அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்த ஆண்டிற்கு மாத்திரம் 94 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் டி.எஸ் சேனாநாயக்க கல்லூரிக்கு உரித்தான இடமொன்றை நகர அபிவிருத்தி அதிகார சபை பலாத்காரமாக அபகரிக்க நடவடிக்கைகள் எடுப்பதாக சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான பிரதான தேசிய பாடசாலையின் நிலமொன்றை நாம் அபகரிக்க நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டாகும். ஆனால் இந்த இடத்தில் பாடசாலைக்கான அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை உருவாக்கிக் கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலையை அண்மித்த பகுதியில் சில்லறை கடைகள், டயர் கடைகள் உள்ளன. இதனால் பாடசாலை முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. எனவே பாடசாலைக்கான கம்பீரமான காட்சியொன்றை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய தேவை எமக்கு உள்ளது.
அதற்காக பாடசாலைக்கு முன்னாள் உள்ள கடைகளை அகற்றவும், பாடசாலைக்கு அண்மையில் வாகன தரிப்பிடம் ஒன்றினை உருவாக்கிக் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை நாம் கையாண்டு வருகின்றோம். மாறாக நில அபகரிப்பை நாம் முன்னெடுக்கவில்லை என்றார்.
No comments:
Post a Comment