கப்பலில் எண்ணெய் கசிவென்றால் இறால், மீன்கள் பாரியளவில் பாதிப்புக்குள்ளாகும் - கலாநிதி அஜந்தா பெரேரா - News View

About Us

About Us

Breaking

Thursday, June 10, 2021

கப்பலில் எண்ணெய் கசிவென்றால் இறால், மீன்கள் பாரியளவில் பாதிப்புக்குள்ளாகும் - கலாநிதி அஜந்தா பெரேரா

(எம்.மனோசித்ரா)

சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்திக்கமைய பேர்ள் கப்பலில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவு கலப்பு பகுதிகளுக்கு செல்லுமாயின் அவை முழுமையாக மாசடைவதோடு, இறால் மற்றும் மீன்கள் பாரியளவில் பாதிப்புக்களுக்கு உள்ளாகும் என்று சூழலியலாளர் கலாநிதி அஜந்தா பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பேர்ள் கப்பல் தீ விபத்திற்குள்ளான கடற்பரப்பில் எண்ணெய் படலம் உருவாகியுள்ளதை சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறியக்கிடைத்துள்ளது.

கடற்பரப்பில் காணப்படுகின்ற இந்த எண்ணெய் படலம் கலப்பு பகுதிகளுக்கு செல்லுமாயின் அந்த பகுதி முழுமையாக மாசடையும். அத்தோடு குறித்த பகுதி இறால்கள் உருவாகும் இடமாகும். அதேபோன்று மீன்கள் அவ்விடத்திலேயே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன.

ஏற்கனவே எமது கடற்பரப்பு பாரியளவில் மாசடைந்துள்ளது. அதன் காரணமாகவே கடல் ஆமைகள் இறந்து கரையொதுங்குகின்றன. பல வகை மீன்களும் இறந்துள்ளன. எண்ணெய் கசிவுடன், கடலில் விழுந்துள்ள கொள்கலன்கள் உடைந்து அவற்றிலுள்ள பொருட்கள் கடலில் கலக்குமாயின் அது கடல் சூழலுக்கு பாரிய சீரழிவை ஏற்படுத்தும்.

இது தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் இதுவரையில் அதற்கான எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. 

இதன் மூலம் நஷ்ட ஈடு கிடைக்கப் பெறும் என்று திருப்தியடைய முடியாது. தற்போது ஏற்பட்டுள்ள கடல் மாசினை மதிப்பிட்டால் அதற்காக பல தலைமுறைக்கும் நஷ்டஈடு செலுத்த வேண்டியேற்படும்.

எனவே இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை உணர்ந்து பாராளுமன்றத்தில் இது குறித்து கலந்தாலோசிக்குமாறு வலியுறுத்துகின்றோம். தற்போது உரிய நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படாவிட்டால் எமது கடற்சூழல் முழுமையாக பாதிப்படையும் என்றார்.

No comments:

Post a Comment