போர் செய்த நாம் வெளியே போகிறோம், ஆனால் யுத்தத்தை முடித்த தளபதி சிறைக்குள் வந்துள்ளாரென கூறினார்கள் - சரத் பொன்சேகா - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 22, 2021

போர் செய்த நாம் வெளியே போகிறோம், ஆனால் யுத்தத்தை முடித்த தளபதி சிறைக்குள் வந்துள்ளாரென கூறினார்கள் - சரத் பொன்சேகா

நீண்ட காலம் சிறையிலுள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பதில் தான் உறுதியாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வில் நேற்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, “நான் கடந்த காலத்தில் கைது செய்யப்பட்ட போது, என்னை 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதியன்று நள்ளிரவு 12 மணிக்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றார்கள்.

அதாவது, பின் கதவு வழியாக கொண்டு சென்று, முன்பக்க வாயிலுக்கு என்னைக் கொண்டுவந்தபோது, பஸ்சிலிருந்த சில தமிழ் இளைஞர்கள் என்னைப் பார்த்து, போர் செய்த நாம் வெளியே போகிறோம். ஆனால் யுத்தத்தை முடித்த தளபதி சிறைக்குள் வந்துள்ளாரென கூறினார்கள்.

அதேபோன்று, வெலிக்கடையிலிருந்து நீதிமன்றத்துக்கு நான் வந்தபோது, எனது இடது பக்கத்தில், தற்கொலைத் தாக்குதல் மூலம் என்னைக் கொல்ல வந்தவர் அமர்ந்தார். மொரிஸ் எனும் அந்த இளைஞர் என்னை கொலை செய்ய வந்தாரென்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாம் இருவரும் அன்று பேசிக் கொண்டோம். அவர் இன்னமும் சிறையில்தான் உள்ளார். எனக்கு எப்போதாவது தொலைபேசியிலும் அவர் உரையாடுவார்.

கடந்த 2006 ஏப்ரல் மாதமளவிலேயே என்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றிலிருந்து ஒரு வருடத்தில் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டாலும் இன்னமும் அந்த வழக்கு முடிவடையாமலுள்ளது. இப்படியாக நீண்ட காலம் சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் நானும் உறுதியாக உள்ளேன்.

அந்த இளைஞன் 15 வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். இதுவே அவருக்கான போதுமான தண்டனையாகவே நான் கருதுகிறேன். எனவே, அரசாங்கம் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டால் நாமும் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்” என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad