(எம்.மனோசித்ரா)
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீப்பரவல் எதிர்பாராத விதமாக நடைபெற்ற சம்பவமாகும். எனினும் சிலர் இதனை அரசியல்மயப்படுத்த முயற்சிக்கின்றனர் என தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் றோஹித அபேகுணவர்தன, இக்கப்பலுக்கு டுபாய், கட்டார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை உண்மைக்கு புறம்பான தகவலாகும் என்றும் தெரிவித்தார்.
அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீப்பரவல் எதிர்பாராத விதமாக நடைபெற்ற சம்பவமாகும். எனினும் சிலர் இதனை அரசியலாக்க முயற்சிக்கின்றனர்.
குறித்த கப்பல் டுபாய், கட்டாரின் ஹமாட் துறைமுகம் மற்றும் இந்தியாவின் ஹசீரா ஆகிய துறைமுகங்களில் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுவது உண்மைக்கு புறம்பானதாகும்.
இந்த கப்பல் குறித்த துறைமுகங்களுக்கு சென்ற பின்னரே கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பில் அறியாதவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அரசியலை மையப்படுத்தியவையாகும்.
கலாநிதி சந்திமா விஜேகுனவர்தன இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கடந்த காலங்களில் குறிப்பிட்டவொரு கட்சியில் தேர்தலில் போட்டியிட்டவராவர். எனவே அவர் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் இவ்விடயத்தை அரசியல் மயப்படுத்த முற்படுகின்றார் என்ற சந்தேகம் எழுகிறது.
வீதியில் சென்று கொண்டிருக்கும் எரிபொருளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனமொன்று விபத்திற்குள்ளானாலும் அதற்கும் அரசாங்கமே காரணம் என்று கூறுவார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொறுப்பிலிருந்து விலகி செயற்படாது. அதற்கமைய இது தொடர்பில் தொடர்ந்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதேவேளை இது தொடர்பில் கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறுகின்றோம். எமது தவறுகளை சுட்டிக்காட்டினால் அதற்கு தலைவணங்கி அதனை ஏற்றுக் கொள்ள தயாராகவுள்ளோம். எனினும் அதனை சரியான முறையில் உரிய தகவல்களுடன் முன்வைக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment