”பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மூன்றாம் தரப்பினரின் தேவைகளுக்காக தவறாகப் பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” - சட்டத்தரணி சேனக பெரேரா - News View

About Us

About Us

Breaking

Friday, June 18, 2021

”பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மூன்றாம் தரப்பினரின் தேவைகளுக்காக தவறாகப் பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” - சட்டத்தரணி சேனக பெரேரா

நா.தனுஜா

பொலிஸாரினால் தடுத்து வைக்கப்படும் சந்தேகநபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் உரிய அதிகாரிகளுக்கும் உள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மூன்றாம் தரப்பினரின் தேவைகளுக்காக தவறாகப் பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, இலங்கையின் நீதிக்கட்டமைப்பைப் பொறுத்தவரை, ஒருவரை கைது செய்வதும் அவரைத் தடுத்து வைப்பதும் சட்ட ரீதியான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். குற்றவியல் சட்டதிருத்தங்களின் அடிப்படையில் கடந்த காலங்களில் நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

பின்னர் அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, உரியவாறு உத்தரவு பெறப்பட்டதன் பின்னரே தடுத்து வைக்கப்படுவார்கள். எனினும் 1979 ஆம் ஆண்டில் 48 ஆவது இலக்கப் பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரை தடுத்து வைப்பதற்கான உத்தரவைப் பெற்று தொடர்ச்சியாகத் தடுத்து வைக்க முடியும்.

ஆனால் தடுத்து வைப்பதற்கான அந்த உத்தரவைப் பெறுவதற்கு நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. மாறாக அந்த உத்தரவில் ஜனாதிபதியே கையெழுத்திட வேண்டும். ஜனாதிபதி இல்லாவிட்டால் பாதுகாப்புச் செயலாளர் கையெழுத்திடலாம்.

அதன் காரணமாகவே பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் மோசமான சட்டம் என்று நாம் தொடர்ச்சியாகக் கூறி வருவதுடன் சமூகத்திலும் அது முக்கிய பேசுபொருளாதக மாறியிருக்கிறது.

ஏனெனில் அந்தச் சட்டத்தில் நீதிமன்றம் விலக்களிக்கப்பட்டுள்ளது. அதனால் ஒருவரைக் கைது செய்து எவ்வளவு காலத்திற்கு தடுத்து வைக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம் பாதுகாப்புச் செயலாளருக்கு உள்ளது.

கடந்த காலங்களில் பாதுகாப்புச் செயலாளர் பதவியை வகித்தவர்கள் நிர்வாகப் பிரிவு அதிகாரிகள் அல்ல என்பதை நாமனைவரும் அறிவோம். அவை அரசியல் ரீதியான நியமனங்களேயாகும். 

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்டார். அதேபோன்று தற்போது கமல் குணரத்ன அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் அண்மையில் கைது செய்யப்பட்ட பல்லவத்த கமகே சமிந்த தில்ருக் என்ற சந்தேகநபரை விளக்கமறியலில் வைப்பதற்கு கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் முதலில் உத்தரவிடப்பட்டது. அதன் பின்னர் அவரைத் தடுத்து வைப்பதற்கான கோரிக்கை குற்றவி சாரணைப் பிரிவினரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது.

இலங்கைச் சட்டத்தின் பிரகாரம், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவரைக் குற்ற விசாரணைப் பிரிவிடம் கையளிப்பதற்கான சரத்துக்கள் எவையுமில்லை. எனவே நாட்டில் இல்லாத சட்டமொன்றின் அடிப்படையிலேயே சமிந்த தில்ருக்கை தம்மிடம் கையளிக்குமாறு குற்ற விசாரணைப் பிரிவினால் கோரப்பட்டது.

கடந்த காலங்களில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பார்த்தோம். நபரொருவர் பாதாளக்குழுக்களின் நடவடிக்கைகளுடன் தொடர்பு பட்டிருப்பினும், அந்த நபரை விடவும் மோசமான பாதாள உலகக்குழுவாக மாறும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை.

அரசாங்கமும் பொலிஸாரும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும். மூன்றாம் தரப்பின் தேவைகளுக்காக வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுமானால், அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பொலிஸாரும் உரிய அதிகாரிகளுமே கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

அண்மையில் கொஸ்கொட தாரக என்பவரும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே கொல்லப்பட்டார். அவருக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக அவரது குடும்பத்தினரும் சட்டத்தரணியும் உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியிருந்த நிலையிலேயே இத்தகைய சம்பவம் பதிவானது.

எனவே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment