(எம்.மனோசித்ரா)
ஏறாவூர் பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டதாகத் தெரிவித்து பொதுமக்கள் சிலரை முழந்தாளிடச் செய்த இராணுவத்தினருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் வினவிய போதே அவர் மேலும் தெரிவிக்கையில், ஏறாவூரில் சிவில் மக்களுக்கு 'துன்புறுத்தல்' ஏற்படுத்தியமை தொடர்பில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் தொடர்பாக இராணுவ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய ஏறாவூர் பகுதியில் ஒரு சில இராணுவ வீரர்கள் சனிக்கிழமை மாலை இராணுத்தின் கௌரவம், ஒழுக்க விதிமுறைகளுக்கு புறம்பாக பொதுமக்கள் சிலரை துன்புறுத்தியமை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டமை இனங்காணப்பட்டது.
அதனையடுத்து இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் உத்தரவின் பேரில், அம்முறையற்ற நடத்தையில் சம்பந்தப்பட்ட சகல இராணுவ வீரர்களது கடமைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் சகலரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதியின் கட்டளைகளுக்கமைய குறித்த சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவ பொலிஸ் விசாரணை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான விசாரணைகள் முடிந்ததும், தவறு செய்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொள்ளும்.
அத்தோடு இவ்வாறு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட 18 நபர்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி 4 சந்தர்ப்பங்களில் கடையொன்றில் ஒன்று கூடியுள்ளனர். இராணுவத்தினரின் மறுப்பை மீறி இவர்கள் தொடர்ந்தும் ஒன்று கூடியமையினாலேயே அவர்களால் இவ்வாறானதொரு துன்புறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் சட்டத்திற்கு அப்பால் இவ்வாறு பொது மக்களை துன்புறுத்துவதை இராணுவ ஒழுக்கம் அனுமதிக்கவில்லை. எனவே தான் அவர்களுக்கு துரித இடமாற்றம் வழங்கப்பட்டது என்றார்.
No comments:
Post a Comment