சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் ஆண்கள் கிரிக்கெட்டுக்கான உலகளாவிய நிகழ்வுகளை விரிவாக்குவதாக அறிவித்துள்ளது.
நேற்றையதினம் இடம்பெற்ற ஐ.சி.சி.யின் மெய்நிகர் கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 8 அணிகள் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு 2024 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் விளையாடப்படும் என்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது 16 அணிகளுடன் விளையாடும் டி-20 உலகக் கிண்ணம் 2024-31 சுழற்சியில் 20 அணிகளாக விரிவுபடுத்தப்படும். குறிப்பிட்ட காலப்பகுதியில் 4 டி-20 உலகக் கிண்ண போட்டிகள் விளையாடப்படும்.
2019 ஆம் ஆண்டில் 10 அணிகள் பங்கெடுத்த 50 ஓவர் உலகக் கிண்ணம் 2027 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் 14 அணிகளாக விரிவுபடுத்தப்படும்.
2027-2031 உலகக் கிண்ணம்
2027 மற்றும் 2031 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 14 அணிகளைக் களமிறக்க ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது.
இதற்கான போட்டிகளில் எண்ணிக்கையை 54 ஆக நிர்ணயித்துள்ளது.
14 அணிகள் இரு குழுக்களாகப் பிரிந்து மோதவுள்ளன. இரு குழுவிலும் டாப் 3 இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். அதனைத் தொடர்ந்து அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெறும்.
இதற்குமுன் 2003 ஆம் ஆண்டு இதே விதிமுறைகளுடன் உலகக் கிண்ணம் நடத்தப்பட்டது.
டி-20 உலகக் கிண்ணம்
2024, 2026, 2028 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் டி-20 உலகக் கிண்ணத் தொடரை நடத்த ஐ.சி.சி திட்டமிட்டுள்ளது.
இதற்கான போட்டிகளில் எண்ணிக்கை 55 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் 2017 ஆம் ஆண்டோடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரை 2025, 2029ஆம் ஆண்டுகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
2019 ஆம் ஆண்டுமுதல் 2021 ஆம் ஆண்டுவரை நடத்தப்படும் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனால் இத்தொடரை அடுத்தடுத்து நடத்த ஐ.சி.சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
2025, 2027, 2029, 2031 ஆம் ஆண்டுகளில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 டி-20 உலகக் கிண்ணம்
2021 டி-20 உலகக் கிண்ணம் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியதால், டி-20 உலகக் கிண்ணத்தை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன இது குறித்து ஐ.சி.சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய சவுரவ் கங்குலி, “இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் டி-20 உலகக் கிண்ணத்தை இங்கு நடத்துவதில் சிக்கல் இருக்காது. எங்களுக்கு போதிய அவகாசம் கொடுத்தால் சரியான திட்டங்களை வகுத்து உங்களுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு ஐசிசி சம்மதம் தெரிவித்து, ஜூன் 28 ஆம் திகதி வரை அவகாசம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment