முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அரச காடு அழிப்பு - 8 பேர் கைது! - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 22, 2021

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அரச காடு அழிப்பு - 8 பேர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் திம்பிலி பகுதியில் அரச காடுகள் அழிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினைச் சேர்ந்த 8 பேர் பொலிசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் திம்பிலி குளத்திற்கு சொந்தமான பகுதி மற்றும் அதனை அண்டிய காட்டுப் பகுதிகள் கனரக இயந்திரம் கொண்டு அழிக்கப்பட்டு அரச காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் கோம்பாவில் கிராம சேவையாளரினால் அடையாளப்படுத்தப்பட்ட நபர்களின் பெயர்களுடன் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, திம்பிலி குளத்தின் கமக்கார அமைப்பினர் மற்றும் புதுக்குடியிருப்பு கமநல சேவைகள் திணைக்களத்தினரும் தமது பதிவில் உள்ள குளத்தின் காணி அபகரிக்கப்பட்டுள்ளதுடன் சட்ட விரோத மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு காணி அபகரிப்பினை மேற்கொண்டதாக பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு பொலிசாரால் நேற்று (22) விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணையின் பின் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment