மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 82,341 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மலேசியாவில் மூன்றாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நேற்று அமலுக்கு வந்துள்ளது. வரும் 14ஆம் திகதி வரை இந்த முழு முடக்கநிலை உத்தரவு அமலில் இருக்கும்.
அண்மைய சில தினங்களாக மலேசியாவில் அன்றாடம் பதிவாகும் புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.
இந்நிலையில் குழந்தைகளும் அதிக அளவில் தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
"மலேசியாவில் நான்கு வயதுக்கு உட்பட்ட 19,851 குழந்தைகளும், 5 முதல் 6 வயதுக்குட்பட்ட 8,237குழந்தைகளும், 7 முதல் 12 வயதுக்குட்பட்ட 26,851 குழந்தைகளும், 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 27,402 குழந்தைகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்று அமைச்சர் ஆதம் பாபா செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
எனினும் இவர்களில் யாரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து மலேசியாவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பொது நடமாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இக்குழந்தைகளை மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மன்றம் அறிவித்துள்ளது.
அவசர தேவைகளுக்காகவும் மருத்துவ சிகிச்சைக்காகவும் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல முடியும். மேலும், கல்வி மற்றும் உடற்பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் குழந்தைகள் வீட்டுக்கு வெளியே அழைத்துச் செல்ல அனுமதி உண்டு. இதர காரணங்களுக்கு அனுமதி இல்லை என பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த ஆண்டு இறுதிக்குள் மலேசிய குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிடும் என அந்நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
மலேசிய தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படும் இவர், ஜூலை மாதத்துக்குள் 16 மில்லியன் தடுப்பூசிகள் மலேசியா வந்தடையும் எனக் கூறியுள்ளார்.
மலேசியாவில் தற்போது சுமார் ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், தடுப்பூசி போடும் விகிதம் நாள் ஒன்றுக்கு 150,000ஆக அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை நிச்சயமாக அடைய முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment