இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் விவகாரம் தொடர்பிலான வழக்கு : நீதிமன்றில் நேரில் ஆஜராகி விளக்கமளித்த சி.ரி.ஐ.டி. : ஜூலை 6 இல் தீர்மானத்தை அறிவிப்பதாக வழக்கை ஒத்தி வைத்தார் நீதிவான் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் விவகாரம் தொடர்பிலான வழக்கு : நீதிமன்றில் நேரில் ஆஜராகி விளக்கமளித்த சி.ரி.ஐ.டி. : ஜூலை 6 இல் தீர்மானத்தை அறிவிப்பதாக வழக்கை ஒத்தி வைத்தார் நீதிவான்

(எம்.எப்.எம்.பஸீர்)

நவரசம் என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞரின் விவகாரம் தொடர்பிலான வழக்கில், சி.ரி.ஐ.டி. அதிகாரிகள் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். 

எனினும் அஹ்னாபுக்கு எதிராக சாட்சிகள் இருப்பின் அவற்றின் சுருக்கத்தை மன்றில் அவர்கள் முன்வைத்திருக்கவில்லை.

எவ்வாறாயினும் அஹ்னாபை நீதிமன்றில் ஆஜர் செய்த சட்ட பிரிவு தொடர்பில் விளக்கமளிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு விடுத்திருந்த உத்தரவுக்கு அமைய, அதன் நீதிமன்ற வழக்கு நெறிப்படுத்தல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கபில மன்றில் ஆஜராகி விளக்கமளித்தார்.

நேற்றையதினம் இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள், கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, அஹ்னாப் ஜஸீம் சார்பில், சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர மன்றில் ஆஜராகினர். பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு சார்பில் பொலிஸ் பரிசோதகர் கபில ஆஜரானார்.

இதன்போது நீதிமன்றின் அறிவித்தல் பிரகாரம் மன்றுக்கு கருத்து தெரிவித்த சி.ரி.ஐ.டி.யின் பொலிஸ் பரிசோதகர் கபில, 'அஹ்னாப் ஜஸீம் எனும் சந்தேகநபர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டவர். அவர் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய விடயங்கள் நிறைவு பெற்றதும் கடந்த ஜூன் 12 ஆம் திகதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை மன்றில் அஜர் செய்யும் போது, அவர் தனக்கு சட்டத்தரணியின் உதவி வேண்டும் என எம்மிடம் கூறவில்லை. எனவேதான் நாம் அது தொடர்பில் சட்டத்தரணிகளுக்கு அறிவிக்கவில்லை. சந்தேகநபர் கோரினால் மட்டுமே நாம் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது வழமை.

எனினும் அதன் பின்னர் ஒரு நாள், அஹ்னாப் ஜஸீமின் சட்டத்தரணி எனக்கு தொலைபேசியில் அழைத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் விசாரித்தார். அதன்போது விபரங்களை நான் அவருக்கு கூறினேன். 

எனினும் கொவிட் நிலைமை நிலவும் நிலையில் அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது எனக்கு தெரியாது எனவும் அதனை சிறைச்சாலைகள் திணைக்களத்திலேயே அறிய வேண்டும் எனவும் அவருக்கு நான் குறிப்பிட்டேன்.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 7 ( 2) ஆம் பிரிவின் கீழேயே அவர் மன்றுக்கு ஆஜர் செய்யப்பட்டு இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அச்சட்டத்தின் படி, 6 ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் கைது செய்யப்படும் ஒருவர், 7 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் ஆஜர் செய்யப்படல் வேண்டும். எனினும் அவ்வாரு கைது செய்யப்பட்டவர் 72 மணி நேரத்துக்கு மேலதிகமாக தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதற்காக சட்டத்தின் 9 (1) ஆம் அத்தியாயம் பிரகாரம் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டிருப்பின் அவ்வாறானோரை 7 ( 2) ஆம் அத்தியாயத்தின் கீழேயே ஆஜர் செய்ய வேண்டும்.

இந்த சந்தேகநபருக்கும் 9 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதன் பின்னனியிலேயே அவரை 7 (2) ஆம் அத்தியாயத்தின் கீழ் ஆஜர் செய்தோம்.

சி.ரி.ஐ.டி. பொறுப்பில் சந்தேகநபர் இருந்த போது அவருக்கு உடல் உள ரீதியாக சித்திரவதைகள் இடம்பெற்றதாக அவரது சட்டத்தரணி கடந்த தவணையின் போது குறிப்பிட்டுள்ளார். எனினும் அது முற்றிலும் பொய்யானது. 

அஹ்னாப் ஜஸீம் எனும் இந்த சந்தேகநபராக இருக்கலாம், சி.ரி.ஐ.டி.யின் பொறுப்பில் இருக்கும் வேறு சந்தேக நபர்களாக இருக்கலாம், எவரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகும் வண்ணம் சி.ரி.ஐ.டி. அதிகாரிகள் எவரும் நடந்துகொள்ளவில்லை.

சந்தேகநபரை மன்றில் ஆஜர் செய்ய முன்னர் நாம் சட்ட வைத்திய அதிகாரியிடமும் ஆஜர் செய்தே மன்றில் முன்னிலைப்படுத்தினோம். அஹ்னாப் ஜஸீம் சி.ரி.ஐ.டி. பொறுப்பிலிருந்த காலப்பகுதியில் அவருக்கு முடியுமான அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டிருந்தது. 

சந்தேகநபரிடம் இருந்து பெறப்பட்ட பொருட்கள் அனைத்தும் சி.ரி.ஐ.டி. பொறுப்பில் பாதுகாப்பாக உள்ளது. அது தொடர்பில் விசாரணை நடக்கிறது. விசாரணையின் பின்னர் அவை மன்றில் முன்னிலைப்படுத்தப்படும். என தெரிவித்தார்.

இதன்போது மன்றில் அஹ்னாப் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர பதில் வாதங்களை முன் வைத்தார்.

'கடந்த 11 ஆம் திகதி வெள்ளியன்று, அஹ்னாப் ஜெஸீம், தங்காலை சி.ரி.ஐ.டி. தடுப்பு நிலையத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (2) ஆம் அத்தியாயம் பிரகாரம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவருக்கு சட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ள எந்த வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த விடயம் எமக்கு 14 ஆம் திகதியே தெரியவந்தது.

அஹ்னாப் ஜஸீம் சட்டத்தரணிக்கு தகவல் அளிக்குமாறு கோரவில்லை என்பதால், சட்டத்தரணிகளுக்கு அறிவிக்கவில்லை என சி.ரி.ஐ.டி. அதிகாரி இங்கு குறிப்பிட்டார். 

எனினும் சி.ரி.ஐ.டி. பிடியில் சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக இருந்த அஹ்னாப் விடயத்தில் அனைத்து விதமான சட்ட விடயங்களையும் அவரது சட்டத்தரணி எனும் ரீதியில் நானே முன்னெடுத்தேன் என்பது சி.ரி.ஐ.டி.யினருக்கு நன்றாக தெரியும். அவர்களுக்கு எழுதிய கடிதங்கள், பொலிஸ்மா அதிபர், மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கும் நானே கடிதங்களை எழூதினேன்.

அப்படி இருக்கையில் மன்றில் அவரை ஆஜர் செய்யும் போது அவரது சட்டத்தரணி எனும் ரீதியில் எனக்கு கண்டிப்பாக சி.ரி.ஐ.டி. அறிவித்திருக்க வேண்டும். அது அவர்களது கடமை. அதனை செய்யாது, அஹ்னாப் துன்புறுத்தப்படவில்லை என வெறும் வசனம் ஊடாக இங்கு வாதிடுவதில் அர்த்தமில்லை.

அவ்வாரு அஹ்னாபை முன்னிலைப்படுத்தும் போது எமக்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், அஹ்னாப் உடல், உள ரீதியிலான துன்புறுத்தல்கலுக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதை தீர்மானிக்க தேவையான கோரிக்கைகளை முன்வைக்க இருந்தது.

அஹ்னாப் ஜஸீமை பயங்கரவாத தடை சட்டத்தின் 6 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் அவ்வாறு கைது செய்யப்படுவோர் அச்சட்டத்தின் 7 (1) ஆம் பிரிவின் கீழ் மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் 7 (2) ஆம் அத்தியாயத்தின் கீழேயே அவரை ஆஜர் செய்துள்ளனர். 7 (1) பிரகாரம் ஆஜர் செய்தால், அங்கு சாட்சிகளை ஆராய்ந்து ஒருவரை விடுவிக்க ஆலோசனை வழங்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு உள்ளது. எனவே அதனை தடுக்க சி.ரி.ஐ.டி. இவ்வாறு நடந்துகொண்டுள்ளது.' என குறிப்பிட்டார்.

அத்துடன் அஹ்னாப் ஜஸீமிடம் சட்ட ரீதியிலான விடயங்களை கலந்துரையாட, அவரது சட்டத்தரணிகளுக்கு சந்தர்ப்பம் மறுக்கப்படுவதாக சட்டத்தரணி வில்சன் ஜயசேகர சுட்டிக்காட்டி, அது தொடர்பில் மன்றின் உத்தரவொன்றினை கோரினார். அது தொடர்பில் நீதிவான் சந்திம லியனகே விரிவாக ஆராய்ந்தார்.

ஏனைய கைதிகளுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் வாய்ப்புக்களும் அஹ்னாபுக்கும் வழங்கப்படல் வேண்டும் என சுட்டிக்காட்டிய நீதிவான், தற்போதைய சூழலில் கைதிகள் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கான முறைமை என்ன?, அது தொடர்பில் சுகாதார வழிகாட்டல்கள் உள்ளனவா?, நேரில் சந்திக்க முடியாவிட்டால் மாற்று ஏற்பாடு என்ன என்பது தொடர்பில் மன்றிக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் அஹ்னாப் ஜஸீமை மன்றில் ஆஜர் செய்த விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான தனது தீர்மானத்தை எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி அறிவிப்பதாக கூறி அன்றைய தினத்துக்கு குறித்த வழக்கை நீதிவான் ஒத்திவைத்தார்.

முன்னதாக 26 வயதான கவிஞர் அஹ்னாப், கடந்த 2020 மே 16 அம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை, பண்டாரவெளியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து சி.ரி.ஐ.டி. வவுனியா கிளை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.கே.ஜே. அனுரசாந்தவினால் அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது அவரது வீட்டிலிருந்து 50 இற்கும் அதிகமான நவரசம் கவிதை தொகுப்பு புத்தகங்களும் மேலும் சில புத்தகங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

முதலில் கோட்டை நீதிமன்றில் உள்ள பீ 13101/19 வழக்கு தொடர்பில் அஹ்னாப் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், கடந்த மார்ச் 3 ஆம் திகதி பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோட்டை நீதிமன்றின் குறித்த வழக்கில் அஹ்னாப் சந்தேகநபரில்லை என நீதிமன்றில் அறிவித்திருந்தார்.

எனினும் அவருக்கு எதிராக புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் உள்ள வழக்கொன்று தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வதாக பிரசாந்த ரத்னாயக்க எனும் ரி.ஐ.டி.யின் உப பொலிஸ் பரிசோதகர் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது. அது குறித்த வழக்கே நேற்று இவ்வாறு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment