கிழக்கு மாகாணத்தில் 5 நாட்களில் 55 ஆயிரத்தி 757 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது : காய்ச்சல், தடுமல், இருமல் இருப்பவர்கள் எவ்வித பீதியும் அடையாமல் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

கிழக்கு மாகாணத்தில் 5 நாட்களில் 55 ஆயிரத்தி 757 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது : காய்ச்சல், தடுமல், இருமல் இருப்பவர்கள் எவ்வித பீதியும் அடையாமல் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்

கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொவிட்-19 தடுப்பூசிகள் ஏற்றிவருவதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 19464 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 16063 பேருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 19959 பேருமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 05 நாட்களில் 55 ஆயிரத்தி 757 பேருக்கு கொவிட்-19 தொற்று தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும், நாற்பட்ட நோயாளிகள், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்கள் வெளியில் செல்ல வேண்டாமெனவும், வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்களை கடைப்பிடிக்குமாறும், தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்களை கடைப்பிடிக்காதவர்களுக்கெதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் திருமணம், மரணச்சடங்குகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சமய சடங்குகள் என்பன இடம்பெற்று வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களை கைது செய்வதற்காக சிவில் உடையில் சுகாதார அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான சமூக ஒன்று கூடல்களில் ஈடுபடுபவர்களுக்கெதிராக நீதிமன்றினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் அவதானத்திற்குரிய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 தொற்றின் 03வது அலை மிக வேகமாக பரவி வருவதால் காய்ச்சல், தடுமல், இருமல் இருப்பவர்கள் எவ்வித பீதியும் அடையாமல் அருகில் உள்ள சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்குச் சென்று பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளார். 

கொவிட்-19 மூன்றாவது அலை எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படாமல் உள்ளதாகவும், இதனால் வீட்டிலுள்ள முதியோர்கள் இறக்கும் வீதம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஒலுவில், காரைதீவு நிறுபர்கள்

No comments:

Post a Comment