தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான வவுனியா நகர சபைத் தலைவர் இராசலிங்கம் கௌதமன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொலிசாரால் இன்று (15) பிற்பகல் கைது செய்யப்பட்ட அவர், விசாரணைகளின் பின் சற்று முன்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் உள்ள வாடி வீடொன்றின் முகாமையாளரை தாக்கியமை மற்றும் அதன் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய அவரை கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் (15) வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவரை கைது செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நடந்தது என்ன?
நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள வவுனியா வாடி வீட்டினை நடாத்தி வந்த மா. கதிர்காமராஜா அண்மையில் மரணமடைந்த நிலையில், அவரது குடும்பத்தினரின் பராமரிப்பின கீழ் வாடி வீடு தற்போது உள்ளது.
இந்நிலையில் மூன்று மாத குத்தகைப் பணம் தரவில்லை எனத் தெரிவித்து வாடி வீட்டு வளாகத்திற்குள் உள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நகர சபை தலைவரால் நேற்று (14) நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதன்போது குறித்த வாடி வீட்டில் காவல் கடமையில் நின்றவர்களுக்கும், நகர சபைத் தவிசாளருக்கும் இடையில் முரண்பாடும் ஏற்பட்டிருந்தது.
அத்துடன் அங்கு இருந்த உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டதாக காவல் கடமையில் இருந்தவர்கள் தெரிவித்ததுடன், அச்சம்பவம் தொடர்பில் வாடி வீட்டு பாதுகாவலர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகவும் அனுமதிக்ப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நகர சபை குறித்த வாடி வீட்டு நிர்வாகத்தில் தலையிட முடியாது எனவும் அவர்களது நடவடிக்கைக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறும், வாடி வீட்டில் நின்றவர்கள் மீது அத்து மீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதாகவும், உடமைகளை சேதப்படுத்தியதாகவும் அதனை குத்தகைக்கு நடாத்தி வருபவர்களால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாடு தொடர்பில் இன்று (15) சி.வி. விக்னேஸ்வரனின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எப் கட்சியின் வசமுள்ள வவுனியா நகர சபைத் தலைவர் இராசலிங்கம் கௌதமன் மற்றும் வாடி வீட்டு குத்தகைகாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்ட வவுனியா பொலிசார், நகரசபைத் தலைவர் ஆர். கௌதமனை கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)
No comments:
Post a Comment