எம்.மனோசித்ரா
வெலிகம பிரதேசத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட 220 கிலோ கிராம் ஹெரோயினுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் டுபாயிலுள்ள ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக என்ற போதைப் பொருள் கடத்தல்காரர் என்று தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெலிகம பகுதியில் சுமார் 220 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்கள் குறித்த போதைப் பொருள் தொகையுடன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்கள் திங்கட்கிழமை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
இதனுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் கோட்டேகொட மற்றும் திக்வெல்ல ஆகிய பிரதேசங்களில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் போதைப் பொருள் கடத்தலுக்காக நிதியுதவி வழங்கியவர் என்று தெரியவந்துள்ளது. இவர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். டுபாயிலுள்ள நபரொருவர் இவ்வாறான செயற்பாடுகளை நிர்வகிப்பதாக சந்தேகிக்கப்பட்டது. அதற்கமைய திங்களன்று ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக என்பவர் இதனுடன் தொடர்புபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment