அனைத்து வகையான லஞ்ச் ஷீட் பாவனையையும் தடை செய்ய நடவடிக்கை : இலங்கையில் வருடாந்தம் கிட்டத்தட்ட 106 டொன் லஞ்ச் ஷீட்கள் பயன்படுத்தப்படுகின்றன - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 22, 2021

அனைத்து வகையான லஞ்ச் ஷீட் பாவனையையும் தடை செய்ய நடவடிக்கை : இலங்கையில் வருடாந்தம் கிட்டத்தட்ட 106 டொன் லஞ்ச் ஷீட்கள் பயன்படுத்தப்படுகின்றன

நாட்டில் பாரியளவில் சுற்றாடல் பாதிப்புக்கு காரணமாக இருக்கும் அனைத்து வகையான லஞ்ச் ஷீட் பாவனையையும் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர சுற்றாடல் அமைச்சில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

2016 ஆம் ஆண்டில் அப்போதைய சுற்றாடல் அமைச்சராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன லஞ்ச் ஷீட் பாவனையை தடை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார், ஆனால் சில நிறுவனங்கள் விரைவில் உக்கும் லஞ்ச் ஷீட்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தனர், ஆனால் அந்த தீர்மானம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது உலகில் எந்தவொரு நாடும் லஞ்ச் ஷீட்களைப் பயன்படுத்துவதில்லை. லஞ்ச் ஷீட்களைப் பயன்படுத்தும் ஒரே நாடு இலங்கை மட்டும்தான்.

மேலும், தற்போதைய தகவல்களின்படி, நான்கு பெரிய நிறுவனங்களினால் மாதமொன்றிற்கு 07-08 தொன் லஞ்ச் ஷீட்களை உற்பத்தி செய்கின்றனர். இதற்கமைவாக இலங்கையில் வருடாந்தம் கிட்டத்தட்ட 106 டொன் லஞ்ச் ஷீட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கமைய, எமது நாட்டில் நாளொன்றிற்கு சூழலில் வெளியேற்றப்படும் லஞ்ச் ஷீட்களின் அளவு குறைந்தது 10 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த லஞ்ச் ஷீட்கள் மண்ணில் சிதைந்து உக்கிப்போவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகள் செல்லும். இருப்பினும், லஞ்ச் ஷீட்கள் காரணமாக மண்ணில் சேரும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், லஞ்ச் ஷீட் பயன்பாட்டிற்கு பதிலாக மாற்று வழிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குறித்த நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், சில நிறுவனங்கள் லஞ்ச் ஷீட் உற்பத்தி இயந்திரங்களை வீட்டுத் தொழிலாக ஊக்குவித்து வருவதால், இந்த நாட்டில் தயாரிக்கப்படும் லஞ்ச் ஷீட்கள் குறித்த துல்லியமான தகவல்களைப் பெறுவது கடினமாகவுள்ளது.

இதற்கு முன்னர் சுற்றாடல் அமைச்சு லஞ்ச் ஷீட்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதால், புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிடாமல் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றும் கூறிய அமைச்சர், லஞ்ச் ஷீட்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சின் சம்பந்தப்பட்ட பிரிவுகளையும் மேலும் அறிவுறுத்தினார்.

இந்த கலந்துரையாடலில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜசிங்க மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment