கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும் : ஜனாதிபதி ஊடகப் பேச்சாளரின் கருத்து முட்டாள்த்தனமானது - ராஜித சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும் : ஜனாதிபதி ஊடகப் பேச்சாளரின் கருத்து முட்டாள்த்தனமானது - ராஜித சேனாரத்ன

(எம்.மனோசித்ரா)

கொவிட் பரவல் தற்போதுள்ள நிலையிலேயே தொடர்ந்தும் சென்று கொண்டிருந்தால் நிச்சயம் நாட்டை மூட வேண்டிய நிலை ஏற்படும். எனவே சகல கட்சிகளிலுமுள்ள வைத்தியதுறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள், பேராசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்று மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தற்போது இந்தியாவை விட அபாயமான கட்டத்திலேயே இலங்கை காணப்படுவதாக வைத்தியத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஜூன் மாதத்தில் இலங்கையில் நாளொன்றுக்கு 200 மரணங்கள் பதிவாகக்கூடும் என்று வொஷிங்டன் பல்கலைக்கழகமும் அறிவித்துள்ளது.

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு மிக தாமதமாகவே எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இதனை விட மிகக்கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால் நிலைமை மோசமடைவதை கட்டுப்படுத்த முடியாது.

இலங்கை மருத்துவ சங்கம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட மருத்துவ அமைப்புக்கள் இதனையே வலியுறுத்துகின்றன. அத்தோடு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டங்களும் முறையான ஒழுங்குபடுத்தல்களுடன் முன்னெடுக்கப்பட வேண்டும். காரணம் உலகில் இனங்காணப்பட்டுள்ள 7 வகையான நிலைமாறிய வைரஸ்களில் இலங்கையில் 6 வகையான வைரஸ்கள் இனங்காணப்பட்டுள்ளன.

பிரேசில் வைரஸ் மாத்திரமே இன்னும் இனங்காணப்படவில்லை. இவற்றில் எந்தெந்த வைரஸ்கள் தடுப்பூசியின் மூலம் கட்டுப்படுத்தக் கூடியவை என்பது தெரியாது. எனவே தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்க வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உலக சுகாதார ஸ்தாபனத்திடம் பேசியதன் பின்னரே சைனோபார்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவரின் ஊடகப் பேச்சாளர் கூறுவது முட்டாள்த்தனமான கருத்தாகும். உலக சுகாதார ஸ்தாபனம் அவ்வாறானதொரு அமைப்பல்ல. இந்த கருத்திற்கு உலக சுகாதார ஸ்தாபனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அத்தோடு அவசர பயன்பாட்டுக்காக மாத்திரமே சைனோபார்ம் தடுப்பூசி வழங்கியுள்ளதாகவும், இதன் பக்க விளைவுகள் தொடர்பான ஆய்வுகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஊடாக மாத்திரம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திவிட முடியாது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான பயண கட்டுப்பாடுகளே தீர்வாகும். இன்றைய விட நாளை அபாயம் மிக்கதாகும். தற்போதுள்ள அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் பாதிக்கப்பட்டால் மாத்திரமே இதன் பாரதூரத்தன்மையை புரிந்து கொள்ள முடியும்.

எனவே அமைச்சரவைக்கு மாத்திரம் கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பில் சகல அதிகாரங்களையும் வழங்குவது போதுமானதல்ல. சகல கட்சிகளிலும் அங்கத்துவம் வகிக்கும் சுகாதாரத்துறையில் நிபுணத்துவம் உடையவர்கள் மற்றும் திஸ்ஸ விதாரண போன்ற பேராசிரியர்களையும் அழைத்து ஆலோசனைகளைப் பெற்று கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment