கொரோனா தொற்றுக்குள்ளான கைதி சிறைச்சாலை பஸ்ஸிலிருந்து தப்பியோட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 26, 2021

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி சிறைச்சாலை பஸ்ஸிலிருந்து தப்பியோட்டம்

(செ.தேன்மொழி)

கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளார். இவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கைதியொருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர், பூஸா சிறைச்சாலையிலிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இவர் சிறைச்சாலை பஸ்ஸிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கைதியொருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதுடன், இவர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கைதியை அழைத்துச் செல்லும் போது மாத்தறை வீதியில் மின் கம்பமொன்று வீழ்ந்துள்ளதுடன், அதன் காரணமாக குறித்த பகுதியில் வாகன நெறிசல் ஏற்பட்டுள்ளது.

இதன்போதே கைதி சிறைச்சாலை பஸ் ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தப்பிச் சென்ற கைதியை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை பொலிஸாரும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment