ஐ.சி.சி. யின் ஊழல் மோசடி : அவிஷ்க குணவர்தன விடுதலை - News View

About Us

About Us

Breaking

Monday, May 10, 2021

ஐ.சி.சி. யின் ஊழல் மோசடி : அவிஷ்க குணவர்தன விடுதலை

(எம்.எம்.சில்வெஸ்டர்)

முன்னாள் இலங்கை வீரரும் இலங்கை ஏ கிரிக்கெட் அணியின் பயிற்றுநருமாகவிருந்த அவிஷ்க குணவர்தனவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) ஊழல் மோசடி தடுப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் மீது விடுக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்துள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

இதனால் வழமைபோல அவிஷ்க குணவர்தன கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஐ.சி.சி. அனுமதி வழங்கியுள்ளது.

ஏறக்குறைய மூன்று வருட காலமாக நடத்தப்பட்ட சர்வதேச நீதிமன்ற விசாரணைகளின் முடிவில் இறுதித் தீர்மானமானது மூன்று பேர் கொண்ட நடுவர் குழுவினால் எடுக்கப்பட்டது.

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி தடுப்புப் பிரிவினால் அவிஷ்க குணவர்தன மீது குற்றச்சாட்டு சுமத்தியிருந்தது.

2017 ஆம் ஆண்டில் டுபாயில் நடத்தப்பட்ட டி10 கிரிக்கெட் போட்டித் தொடரின்போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக அவிஷ்க குணவர்தன உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு குற்றச்சாட்டு விதிக்கப்பட்டிருந்தது.

இதன்போது, நுவன் சொய்சாவுக்கு 6 ஆண்டு கால தடையும், தில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு 8 ஆண்டு கால தடையும் விதிக்கப்பட்டது.

மூன்று ஆண்டு காலமாக கிரிக்கெட் நடவடிக்கைகளிலிருந்து தள்ளியிருந்த அவிஷ்க குணவர்தனவுக்கு சர்வதேச விசாரணை மூலம் தற்போது நீதி கிடைத்துள்ளது. அவிஷ்க குணவர்தன சார்பாக இங்கிலாந்து சட்டத்தரணியொருவர் ஆஜராகியிருந்தார்.

மூன்று ஆண்டு காலமாக பயிற்றுவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது போனதால், பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான அவிஷ்க குணவர்தனவுக்கு ஐ.சி.சி. நியாயம் வழங்குமா என அவிஷ்க குணவர்தன தரப்பினர் ஐ.சி.சியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தன்மீது சுமத்தப்பட்ட சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுக்கப்பட்ட அவிஷ்க குணவர்தன, தனது நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டமை குறித்து எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment