"கலைஞரின் சிந்தனைகள் தமிழகத்தில் கல்வெட்டுக்களாகக் காலூன்றியுள்ளன" - ஸ்டாலினின் வெற்றி குறித்து ஹாபிஸ் நஸீர் வாழ்த்து - News View

Breaking

Post Top Ad

Sunday, May 2, 2021

"கலைஞரின் சிந்தனைகள் தமிழகத்தில் கல்வெட்டுக்களாகக் காலூன்றியுள்ளன" - ஸ்டாலினின் வெற்றி குறித்து ஹாபிஸ் நஸீர் வாழ்த்து

தமிழகத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரு வெற்றி பெற்றமை மகிழ்ச்சியளிப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வெற்றி குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது. தமிழகத்தின் பெரும் அரசியல் தலைவர்களின் மறைவுக்குப் பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க வென்றிருப்பது கலைஞர் கருணாநிதியின் ஆளுமைக்கு அடையாளமாகத் திகழப்போகிறது. 

இந்த வெற்றியை வாரிசு அரசியல் தலைதூக்கி உள்ளதாக எண்ண முடியாது. மாறாக,கலைஞரின் சிந்தனையும், செல்வாக்கும் தமிழக அரசியலில் அழிக்க முடியாத கல்வெட்டுக்களாகி உயர்ந்து நிற்பதாகவே எண்ண முடிகிறது.

ஸ்டாலினின் தனி மனித ஆளுமையும் அவர் அரசியலில் பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் புடம் போடப்பட்டு வந்தமையினதும் வெளிப்பாடுதான் அவரை இந்த உச்சப்பதவிக்கு உயர்த்தியுள்ளது. அவரின் வெற்றியை இவ்வாறுதான் எண்ணுகின்றேன். 

தமிழகத்தின் தலைமையை ஸ்டாலின் பொறுப்பேற்றதன், பின்னர் இந்த மாநிலம் மேலும் முன்னேற்றம் அடையுமென நம்புகின்றேன்.

எமது கட்சி, கட்சித் தலைவருடன் மிக நெருக்கத்தைப் பேணிய தமிழக தலைவர் ஒருவர், ஆட்சிபீடமேறுவது அரசியல் ரீதியாக எமக்கு கிடைத்த ஆறுதல்தான். 

மதம், இனங்களைக் கடந்து மொழி ரீதியாக மக்களைப் பிணைத்த கட்சிதான் தி.மு.க. தமிழைப் பேசுவோர் என்பதால், இது எம்மையும் மகிழ்விக்கிறது. 

இந்த அணியில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் கட்சியும் ஆசனங்களை வென்றிருப்பதால், சிறுபான்மைச் சமூகங்களின் அங்கீகாரமாக தி.மு.க நோக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad