நேற்று (05) பிரதமர் மஹிந்த அவர்களுடனான எங்களின் சந்திப்பு தொடர்பில் முகநூல் நண்பர்களும் இன்னும் சிலரும் சமூகவலைத்தளங்களில் பிழையான கருத்துக்களை கூறி வருகின்றனர். 
உண்மையில் நடந்தது என்னவென்றால் நேற்று பாராளுமன்ற அமர்வு நடைபெற்று கொண்டிருந்த போது இந்த நாட்டிலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் ஐயாவின் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், டெலோ உள்ளிட்ட தமிழ் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து அவர்களின் எம்.பிக்கள் சகலரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சமல் ராஜபக்ஸவை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து கல்முனை விவகாரத்தை கையிலெடுத்து கல்முனை நகரை பிரித்து உடனடியாக தரமுயர்த்த வேண்டும் என வலுவான அழுத்தத்தை அவர்கள் கொடுத்திருந்தார்கள்.
அது தொடர்பிலான விளக்கங்களை இன்று அவர்களே தொலைக்காட்சிகளில் தோன்றி விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 
இவ்வாறாக முஸ்லிம் சமூகத்திற்கு நெருக்கடியான கூட்டம் நடைபெற்ற போது இது தொடர்பில் அரசாங்கம் பிழையான தீர்மானத்தை எடுத்துவிடக்கூடாது என்பதனால் உடனடியாக பிரதமருடன் நேரத்தை எடுக்க நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரதமர் அவர்கள் அவருடைய நேரசூசியின் அடிப்படையில் எங்களுக்கு மாலை 05.30 மணியளவிலையே நேரத்தை ஒதுக்கித்தந்தார். 
பிரதமரை சந்திக்க சென்ற நாங்கள் அலரி மாளிகையில் வழமையாக நடைபெறும் கொரோனா (அண்டிஜன்) பரிசோதனைகளை முடித்துக்கொண்டு வெளியாகிய போது இப்தார் நேரமாக இருந்ததால் அலரி மாளிகை அதிகாரிகள் இப்தார் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பிரதமரிடம் தமிழ் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சித் தலைவர்கள் கல்முனை விடயத்தில் ஒட்டுமொத்த அழுத்தத்தை பிரயோகித்து அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாரிய அநீதியை இழைக்க முற்படுகின்ற செய்தியை எத்திவைத்தோம். 
1989 இல் இந்த உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், நிலபுலங்கள், அரச காரியாலயங்கள் என்பன விடுதலை புலிகளின் கட்டாயப்படுத்தலில் அந்த செயலகத்துடன் இணைக்கப்பட்டது என்ற விடயத்தை பிரதமருக்கு அங்கு கலந்துகொண்டிருந்த சகல எம்.பிக்களும் ஒருமித்து சொல்லியிருந்தோம். 
இதில் பிரதமர் தலையிட்டு நீதியான நியாயமான தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தோம். பிரதமர் எங்களின் கோரிக்கையை ஏற்று நிச்சயமாக நீதியான நியாயமான தீர்வை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்தார்.
நேற்றைய தமிழ் தலைவர்களின் சமல் ராஜபக்ச அவர்களுடனான சந்திப்புக்கள் தொடர்பில் இன்று அதிகமான ஊடகங்களில் அந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தவர்களே கூறி செய்திகள் வெளிவந்துள்ளது. 
இங்கு நடப்பவற்றை முகநூல் நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் தலைவர்கள் அவர்களின் விடயமாக ஒரு அரச அமைச்சரை பாராட்டும் நீங்கள் முஸ்லிம்களுக்கு இடம்பெறப்போகும் அநீதிகளுக்கு முன்னேற்பாடாக பாதுகாப்பு தேடி ஓடோடி சென்று பிரதமரை சந்திப்பது உங்களுக்கு கேவலமாக தெரிகிறது. 
மக்கள் ஆணையை பெற்றவர்கள் நாங்கள். மக்கள் இப்போதும் போல எப்போதும் எங்களை நேசிக்கிறார்கள். நீங்கள் சிலர் சமூகவலைத்தளங்களில் எழுதுவதனால் இந்த சமூகம் அனுபவிக்கப்போகும் துயரங்களை போக்க முடியாது. 
உங்களுக்கு தெளிவான சிந்தனையை இறைவன் தர வேண்டும். தமிழ் தலைவர்கள், தமிழ் எம்.பிக்கள் கோபித்து விடுவார்கள் என்பதால் எமது சமூகம் இன்று பகிரங்கமாக ஒரு அறிக்கைகூட விட தயங்கும் காலகட்டத்தில் எவ்வித முகஸ்துதியும் இல்லாமல் சமூகத்துக்காக பேசிக்கொண்டிருக்கிறோம்.
தமிழ் மக்கள் அவர்களின் தேவைக்காக அரசை விமர்சித்து கொண்டே அரச தலைவர்களை சந்திப்பது போன்று நாங்களும் எங்களின் மக்களின் பிரச்சினைகள், ஆள்புல, சமூகம் சார் பிரச்சினைகளை பேச அரச தலைவர்களை சந்திப்பது தவறா என சமூகவலைத்தளத்தில் விமர்சித்துக் கொண்டிருக்கும் சகோதரர்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். 
இந்த சந்திப்பில் அரசாங்கம் எடுத்த பிழையான விடயங்களை பிரதமருக்கு சுட்டிக்காட்டியிருந்தோம். 
இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல விடயங்கள் தொடர்பில் ஆணித்தரமாக பேசி எங்களின் கையெப்பங்களுடன் மகஜரை கையளித்துள்ளோம். 
இது தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் அடங்கிய உயர்மட்ட பாதுகாப்புக்குழு கூட்டத்தில் பேசி தீர்வைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்துள்ளார்.
அன்புக்குரிய சகோதரர்களே !
இந்த புனித ரமலான் மாதத்தில் வீணான முறையில் இக்கட்டான சுழ்நிலைக்கு தள்ளிவிட வேண்டாம். இன்று எமக்கெதிராக பல சூழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. எங்களை பெரும்பான்மையினருடன் முற்றுமுழுதாக மோதவிட்டு குளிர்காய நினைக்கும் சில சக்திகள் வரலாற்று நகரங்களையும், வரலாற்று நிலங்களையும் அபகரிக்க பகிரங்கமாக இறங்கியிருந்தும் இன்னும் புத்தியில்லாதவர்கள் போல நாம் நடக்க கூடாது. 
இவ்விடயம் தொடர்பில் உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், புத்திஜீவிகள் கரிசனையுடன் பணியாற்ற வேண்டுமென்பதுடன் பாராளுமன்ற தலைமைகள் எவ்வாறு சமூகம் சார் விடயங்களில் நடந்துகொள்ள வேண்டும் எனும் விடயங்களை கட்டமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என ஸ்ரீ.ல.மு.கா பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.
 
 
 

 
.jpg) 
 
 
 
.jpg) 
No comments:
Post a Comment