கிராம சேவகர்கள் பணி பகிஷ்கரிப்பை கைவிட்டு மக்களுக்கான சேவையை மேற்கொள்ளவும் - உள்நாட்டலுவல்கள் அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 26, 2021

கிராம சேவகர்கள் பணி பகிஷ்கரிப்பை கைவிட்டு மக்களுக்கான சேவையை மேற்கொள்ளவும் - உள்நாட்டலுவல்கள் அமைச்சு

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் இருக்கும் அனைத்து கிராம சேவகர்களுக்கும் அடுத்த கட்டமாக கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதனால் பணி பகிஷ்கரிப்பை கைவிட்டு மக்களுக்கான சேவையை செயற்திறமையாக மேற்கொள்ள அர்ப்பணிக்க முன்வர வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த அறிவித்துள்ளார்.

மக்கள் சேவையை மேற்கொண்டுவரும் கிராம சேவகர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிராம சேவகர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களின் கோரிக்கைக்கு முறையாக பதிலளிக்காவிட்டால் தொடர் போராட்டத்தை மேற்கொள்வோம் என கிராம சேவக அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இவ்வாறான நிலையிலேயே உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பை விடுத்திருக்கின்றார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாடு முழுவதிலும் மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் காரியாலயங்களில் சேவையில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களுக்கும், கிராம சேவகர்கள், அபிவிருத்தி அதிகாரிகளுக்கும் அடுத்த கட்டமாக கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அதன் பிரகாரம் தற்போது கிடைக்கப் பெற்றிருக்கும் தடுப்பூசிகளில் இந்த அதிகாரிகளுக்கு பெற்றுக் கொடுக்க முன்னுரிமை வழங்க இருக்கின்றோம். இதன்போது கிராம சேவகர்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்படும்.

அதனால் நாட்டின் தற்போதை நிலைமையில் பணி பகிஷ்கரிப்பு போராட்டங்களுக்கு செல்லாமல், மக்களுக்கு தேவையான சேவைகளை செயற்திறமையாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இதேவேளை, மின்சார ஊழியர்களுக்கான கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் தாெடர்பாளர் அதிகாரிகள் சங்கம் அறிவித்திருக்கின்றது.

எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் எமது அதிகாரிகளுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிற்சங்க போராட்டத்துக்கு செல்வதாக அதன் தேசிய அமைப்பாளர் திலீப் சம்பத் பண்டார தெரிவித்திருக்கின்றார்.

No comments:

Post a Comment