ரிசாட் பதியுதீன் பாராளுமன்றம் வருவதை தடை செய்வதற்கு அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு எவ்வித அதிகாரமும் இல்லை - அராஜக அரசியலை அரசாங்கம் செய்து வருகின்றது என்கிறார் வேலுகுமார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

ரிசாட் பதியுதீன் பாராளுமன்றம் வருவதை தடை செய்வதற்கு அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு எவ்வித அதிகாரமும் இல்லை - அராஜக அரசியலை அரசாங்கம் செய்து வருகின்றது என்கிறார் வேலுகுமார்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாராளுமன்றத்திற்கு வருவதை தடை செய்வதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. இந்த செயற்பாடானது சட்டத்தை கையிலெடுத்துக்கொண்டு அராஜக அரசியலை அரசாங்கம் செய்துவருகின்றது என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் காரியாலயத்தில் இன்று (05.05.2021) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாராளுமன்றத்திற்கு வந்து செல்வதற்கும் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கும் முழுமையான உரிமை இருக்கின்றது.

ரிசாட் பதியுதீன் அண்மையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். அவரை ஒரு குற்றவாளியாக இதுவரை இனம் காணப்படவில்லை.

எனவே பொதுமக்களின் வாக்கு பலத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ள ரிசாட் பதியுதீன் பாராளுமன்றத்திற்கு வருவதற்கும் இங்கு நடைபெறுகின்ற கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான சட்ட சிக்கலும் இல்லை.

இது தொடர்பாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் அவரை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்த நிலையில் அவரை பாராளுமன்றம் அழைத்து வர வேண்டுமாக இருந்தால் சபாநாயகரின் கையெழுத்திடப்பட்ட ஆவணம் தேவை என குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

ஆனால் நேற்று முன்தினம் மாலை ரிசாட் பதியுதீனுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை என இன்னுமொரு காரணம் குறிப்பிடப்பட்டது. 

அதேவேளை பாராளுன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தனது வேண்டுகோளின்பேரில் ரிசாட் ரிசாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்றும் அது விசாரணைக்கு இடையூறாக அமையும் எனவும் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவை முன்னுக்கு பின் முரணான கருத்தாகவே இருக்கின்றது.

இந்த விடயமானது எந்த சட்டத்தின் கீழ் நடைமுறைபடுத்தப்படுகின்றது என எனக்கு தெரியவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு சட்டத்தை தனது கையில் எடுத்து செயற்பட முடியுமா? அது எந்த சட்டத்திற்கு உட்பட்டது என்பது புரியவில்லை.

இந்த விடயத்தின் மூலம் தெளிவாக தெரிகின்ற விடயம் என்னவென்றால் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தி தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் திட்டமிடுகின்றது. இது ஜனநாயக நாடா? அல்லது இராணுவ ஆட்சி நடைபெறுகின்ற நாடா? என்ற கேள்வி எழுகின்றது.

எனவே இதன் மூலம் இந்த நாட்டிற்கு இந்த அரசாங்கம் என்ன சொல்ல வருகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றவர்களின் குரல் வளையை நசுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாகவே ஜக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோவையும் கைது செய்வதற்கு திட்டமிட்டு வருகின்றது. இவையெல்லாம் அராஜக அரசியலின் வெளிப்பாடாகும்.

அரசாங்கத்தின் திட்டம் என்னவென்றால் எங்களுடைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை இல்லாது செய்ததைபோல ரிசாட் பதியுதீனுடைய பாராளுமன்ற உறுப்புரிமையையும் இல்லாது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசாங்கம் செயற்படுகின்றது என்பதை அனைவராலும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

எனவே அரசாங்கம் தெளிவாக ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். எந்த காரணம் கொண்டும் எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெருக்கியோ அல்லது எங்களை அச்சுறுத்தியோ எங்களுடைய செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போத கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment