இலங்கையில் தற்போதைய கொரோனா வைரஸ் பரவலின் நிலையை தெளிவுபடுத்தி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 4, 2021

இலங்கையில் தற்போதைய கொரோனா வைரஸ் பரவலின் நிலையை தெளிவுபடுத்தி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

(நா.தனுஜா)

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், மருத்துவமனைகள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றின் இயலுமையை அதிகரிப்பதற்கான நுட்பமுறையைத் தயாரித்தல் உள்ளடங்கலாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளன. அவற்றை விரைந்து முன்னெடுக்குமாறு உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்தி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, ஒரு பொறுப்பு வாய்ந்த கட்டமைப்பு என்ற வகையில் ஆரம்பத்திலிருந்தே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.

அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி நாடு முடக்கப்பட்டபோது அது குறித்து ஆலோசனைகளை முன்வைத்ததுடன் நிலைவரங்களைத் தொடர்ந்து பரிசீலித்து கடந்த ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி 'கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உத்தி' மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தோம்.

அதுமாத்திரமன்றி சுகாதார வழிகாட்டல்களைத் தயாரித்து, வெளியிடுவதில் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

அதேவேளை கொரோனா வைரஸ் பரவலின் அச்சுறுத்தலை நன்கு உணர்ந்துகொண்ட நீங்கள், புதிதாக நிறுவப்பட்ட கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சிற்கு தகுதி வாய்ந்த ஒருவரை பொறுப்பாக நியமித்தீர்கள்.

அதேபோன்று மருந்துப்பொருள் உற்பத்தி மற்றும் கொள்முதல் இராஜாங்க அமைச்சிற்குப் பொறுப்பாகவும் தகுதி வாய்ந்த ஒருவரை நியமித்தீர்கள். தற்போதைய நெருக்கடிமிக்க சூழ்நிலையை முறையாகக் கையாள்வதே அதன் நோக்கமாகக் காணப்பட்டது.

எமது சங்கம் கடந்த வருடம் ஏப்ரல் 4 ஆம் திகதி பரிந்துரைத்த உத்திகளின் பிரகாரம், வலய ரீதியான முடக்கத்தைப் பிரேரித்ததுடன் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் ஒவ்வொரு நாளும் நடைமுறைப்படுத்தப்படும் வகையிலான விடயங்களையும் உள்ளடக்கியிருந்தோம்.

அன்றாட நிலைவரங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, ஆராய்ந்து வலய ரீதியான முடக்கங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். அதற்கு தொற்றுநோய்த்தடுப்புப் பிரிவும் சுகாதார அமைச்சுமே பொறுப்பாகும்.

எனினும் இதுவிடயத்தில் தற்போதுவரை தீர்வுகாணப்படாத குறைபாடுகளை தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு கொண்டிருக்கிறது. குறிப்பாக 12 சமூக மருத்துவ அதிகாரிகளில் கொவிட்-19 கட்டுப்பாட்டுப் பணிகளுக்காக இருவர் மாத்திரமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோன்று தகவல்களைப் பகிரல், தொற்றாளர்கள் தொடர்பில் ஜி.பி.எஸ் வரைபட அடிப்படையைப் பேணல், மாவட்ட ரீதியில் உரிய தகவல்களைப் பெற்றுக்கொடுத்தல், தகவல்களை சரிபார்த்தல் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகளைப் பிரதானமாகக் கூற முடியும்.

கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு நுட்பம், பரிசோதனை நுட்பம் மற்றும் தொற்றாளர்களை கையாளும் நுட்பம் ஆகிய மூன்றும் உள்ளடங்குகின்றன. அதேவேளை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வெளியிடப்படும் அறிக்கைகளும் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவினரால் வெளியிடப்படும் ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையிலானவையாகும்.

இந்நிலையில் தொற்றாளர்களை இனங்காண்பதற்கு முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை போதாமை மற்றும் மருத்துவமனைகளின் இயலுமை என்பன கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமான எதிர்கொள்வதில் சவால்களை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இந்த வைரஸ் பரவலினால் நாட்டின் அனைத்துத் துறைகள் மற்றும் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்கங்களை சரிசெய்வதுடன் குறைந்தளவு தடைகளுடன் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவான வகையிலான சூழலை உருவாக்கும் நோக்கில் நாம் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயலாற்றி வருகின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் மிகச்சரியான உண்மைத் தகவல்களின் அடிப்படையில் உரிய தீர்மானங்களையும் அடுத்தகட்ட நகர்வுகளையும் மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடப்படக்கூடாது.

இந்நிலையில் உரிய தரப்பினர் அல்லது கட்டமைப்புக்கள் பின்வரும் விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துமாறு உங்களிடம் கோருகின்றோம்.

அதன்படி தொற்று நோய்த் தடுப்புப் பிரிவில் சரியான தகவல்களைப் பேணுவதற்கான நடவடிக்கை எடுத்தல், தொற்று நோய்த் தடுப்புப் பிரிவில் உள்ள அனைத்து சமூக மருத்துவ அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்படுவதை உறுதி செய்தல், தொற்று நோய்த் தடுப்புப் பிரிவிற்கு அவசியமான மனித வளத்தை ஒதுக்குதல், தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், பொது மற்றும் தனியார் துறையினருக்கு பரிசோதனை மேற்கொள்ளல் மற்றும் தரவுகளைப் பேணுவதற்கான முறையான கட்டமைப்பை நிறுவுதல், மருத்துவமனைகள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் இயலுமையை அதிகரிப்பதற்கான நுட்பத்தைத் தயாரித்தல், அவ்வப்போதைய நிலைவரங்களின்படி வலய ரீதியான முடக்கத்தை நடைமுறைப்படுத்துவதுடன் உரிய சுகாதார வழிகாட்டல்களை அமுல்படுத்தல், உரிய அதிகாரிகளினால் ஒன்றுக்கொன்று முரணான தகவல்கள் அல்லது அறிவிப்புக்கள் வெளியிடப்படுவதைத் தவிர்த்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad