அம்பியூலன்ஸ் கொள்வனவு என்ற போர்வையில் அரசாங்கம் அதி சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை - பாலித ரங்கே பண்டார - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 26, 2021

அம்பியூலன்ஸ் கொள்வனவு என்ற போர்வையில் அரசாங்கம் அதி சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை - பாலித ரங்கே பண்டார

(எம்.ஆர்.எம்.வசீம்)

அம்பியூலன்ஸ் கொள்வனவு செய்வதென்ற போர்வையில் அரசாங்கம் அதி சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அதற்காக 1.2 பில்லியன் ரூபா செலவிட்டிருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

அரசாங்கம் அம்பியூலன்ஸ் வண்டிகளை கொண்டுவருவதாக தெரிவித்து, அதி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்து மரணங்களும் நாளுக்குநாள் அதிகரித்து செல்கின்றன. இவ்வாறான நிலைமையில் அரசாங்கம் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, அம்பியூலன்ஸ் கொள்வனவு செய்வதாக தெரிவித்து, அதி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அமைச்சர்கள், அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த வாகனங்கள் கொள்வனவு செய்ய தீர்மானித்திருக்கின்றது.

மேலும் எமது அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக ராஜித்த சேனாரத்தன இருக்கும்போது 152 சொகுசு அம்பியூலன்ஸ் வண்டிகளை கொள்வனவு செய்திருந்தார். அதேபோன்று ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடி 1990 சுயசரிய வேலைத்திட்டத்தின் கீழ், 209 அம்பியூலன்ஸ்களை பெற்றுக் கொண்டிருந்தார். அதன் பிரகாரம் மொத்தமாக 361 அம்பியூலஸ் வண்டிகளை நாங்கள் பெற்றுக் கொடுத்திருந்தோம்.

இவ்வாறான நிலையிலே அரசாங்கம் 50 அம்பியூலஸ் வண்டிகளை கொள்வனவு செய்வதென்ற போர்வையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என 227 அதி சொகுசு டொயோட்டா ரக வாகனங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்திருக்கின்றது.

அதற்காக 1.2 பில்லியன் ரூபா செலவிட்டிருக்கின்றது. இந்த விடயங்கள் வெளியில் தெரியவந்ததும், வாகனங்கள் கொள்வனவு செய்யும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

மேலும் கொவிட் காரணமாக நாளாந்தம் பல உயிர்கள் இழக்கப்படுகின்றன. இது தொடர்பில் சிந்தித்து, அதற்கு தேவையான தடுப்பூசிகளை ஆரம்பத்திலேயே பெற்றுக் கொள்ள அரசாங்கத்திடம் பணம் இருக்கவில்லை. ஆனால் அமைச்சர்களுக்கு சொகுசு வாகனம் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

கொவிட் தடுப்பூசிகளை அரசாங்கம் ஆரம்பத்திலேயே பெற்றுக் கொண்டிருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. பெற்றுக் கொள்ளப்பட்ட தடுப்பூசிகளையும் அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலின் பிரகாரம் வழங்காமல் நினைத்த பிரகாரம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

கொவிட் தடுப்பூசி நாட்டில் இருக்கும் மக்கள் தொகையில் 20 வீதமானவர்களுக்கு வழங்குமாறே உலக சுகாதார ஸ்தாபனம் முழு உலகுக்கும் அறிவித்திருந்தது. அதில் சுகாதார, பாதுகாப்பு துறையினருக்கு முன்னுரிமை வழங்குமாறு குறிப்பிட்டிருந்தது.

அதன் பிரகாரம் செயற்பட்டிருந்தால் நாட்டில் இருக்கும் 2 கோடி 20 இலட்சம் மக்கள் தொகையில் 10 இலட்சம் பெருக்கேனும் தடுப்பூசியை முழுமையாக ஏற்றியிருக்க முடிந்திருக்கும். ஆனால் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட்டு அனைத்தையும் குழப்பிக்கொண்டிருக்கின்றது. இதனால் சாதாரண மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment