எனது கணவர் ரிஷாட் பதியுதீன் சட்டத்திற்கு முரணாக கைது செய்யப்பட்டமையினால் நானும் எனது பிள்ளைகளும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியிருக்கிறோம் - விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் மனைவி ஆயிஷா - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 4, 2021

எனது கணவர் ரிஷாட் பதியுதீன் சட்டத்திற்கு முரணாக கைது செய்யப்பட்டமையினால் நானும் எனது பிள்ளைகளும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியிருக்கிறோம் - விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் மனைவி ஆயிஷா

நா.தனுஜா

எனது கணவரான ரிஷாட் பதியுதீன் 20 வருட காலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதுடன் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றியும் வருகின்றார். அவருக்கும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்கும் தொடர்பிருப்பதாக இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை. எனவே அவரை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவரது மனைவி ஆயிஷா ரிஷாட் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அவரது மனைவி ஆயிஷா ரிஷாட் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, எனது கணவர் ரிஷாட் பதியுதீன் சட்டத்திற்கு முரணாக கைது செய்யப்பட்டமையினால் நானும் எனது பிள்ளைகளும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியிருக்கிறோம். ரமழான் மாதமான ஏப்ரல் 24 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் சடுதியாக குற்ற விசாரணைப் பிரிவினர் எமது வீட்டிற்குள் நுழைந்தது எனது கணவரை கைது செய்தனர்.

கைது செய்தமைக்கான காரணங்கள் எதனையும் அவர்கள் அப்போது கூறவில்லை. பின்னர் எனது கணவர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்தபோது அவருக்கும் அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றிய பாலசுப்ரமணியம் என்பவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் பற்றிய விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று அறிந்தோம். அத்தோடு பாலசுப்ரமணியத்திற்கு இன்சாப் அஹமட் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட 33/24 இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், உலோகக்கழிவுகளை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் வசமிருந்தது.

அவ்வேளையில் இந்த அதிகாரம் அமைச்சின் செயலாளரினால் மேலதிக செயலாளர் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அதில் அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர் மற்றும் பல்வேறு ஏற்றுமதியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

எனினும் அந்தக் கூட்டம் தொடர்பில் எனது கணவருக்கு எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என்பதுடன் அவர் அதற்குச் சென்றிருக்கவுமில்லை. எனினும் அந்தக் கூட்டத்தில் உலோகக் கழிவுகளை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி சுமார் 7 வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் கொலொசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மேலதிகமான மேலும் இரு கம்பனிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் அந்த கொலொசஸ் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த இன்சாப் அஹமட் ஒரு தற்கொலைக் குண்டுதாரியாக மாறுவார் என்ற சந்தேகம் அப்போது எவருக்கும் இருக்கவில்லை.

ஆகவே தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் தமக்குரிய கடமைகளின் அடிப்படையில் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக மற்றும் மேலதிக செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோரே ஏற்றுமதிக்கான அனுமதியை வழங்கினார்கள்.

அதேவேளை கொண்டாச்சி கைத்தொழில் பேட்டை மற்றும் வெலிஓயா கைத்தொழில் பேட்டை ஆகியவற்றை விரிவுபடுத்துவதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக 2019 ஆம் ஆண்டு மார்ச் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பாலசுப்ரமணியத்தினால் எனது கணவருக்கு மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதன்போது கொலொசஸ் நிறுவனம் தொடர்பிலோ அல்லது ஏற்றுமதி தொடர்பிலோ எதுவும் கலந்துரையாடப்படவில்லை என்று என்னால் உறுதியாக கூறமுடியும்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை எனது கணவர் கடுமையாக கண்டனம் செய்திருந்தார். எனினும் அவரை நோக்கி கைகள் நீட்டப்பட்டதுடன், அவர் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் சில குழுவினர் வலியுறுத்தினார்.

அவற்றுக்கு மதிப்பளித்து எனது கணவர் பதவி விலகியதுடன் விசாரணைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். எனது கணவருக்கு எதிராக ஏதேனும் முறைப்பாடுகள் காணப்படுமாயின் அவற்றை வழங்குமாறு ஊடகங்களின் மூலம் விசாரணை அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர்.

அத்தோடு இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கென விசேட பிரிவொன்று நிறுவப்பட்டதுடன், விசாரணைகளின் முடிவில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் எனது கணவர் நிரபராதி என்று குறிப்பிட்டிருந்தனர்.

எனது கணவர் 20 வருட காலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதுடன் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றியும் வருகின்றார். அவருக்கும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்கும் தொடர்பிருப்பதாக இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்றி அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பது எவ்வகையிலும் நியாயமான விடயமல்ல என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அதுமாத்திரமன்றி அவர் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வந்த நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமையும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில், ஞானசார தேரரின் செயற்பாடுகளும் குண்டுத் தாக்குதல்களுக்குப் பிரதான காரணமாக அமைந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அவரோ அல்லது இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்று இனங்காணப்பட்டவர்களோ இன்னமும் கைது செய்யப்படவோ, விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவோ இல்லை. இவையனைத்தையும் கருத்திற்கொண்டு எனது கணவரையும் அவரது சகோதரரையம் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment