மாலைதீவு தலைநகர் மாலேவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில்ல் காயமடைந்த, அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடந்த வியாழக்கிழமை மாலை தனது விட்டுக்கு வெளியில் கார் வண்டிக்குள் நுழையும்போது இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் பொருத்தி இருந்த குண்டே வெடித்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அவுஸ்திரேலிய மத்திய பொலிஸ் படை குழு ஒன்று மாலைதீவுக்கு விரைந்துள்ளது.
மாலைதீவில் ஜனநாயக முறையில் தேர்வான முதல் ஜனாதிபதியான 53 வயது நஷீத், கடும்போக்கு இஸ்லாமியவாதிகளை விமர்சிப்பவராக உள்ளார்.
2008 ஆம் ஆண்டு பல தரப்புகள் போட்டியிட்ட தேர்தலில் அவர் வென்றபோதும் நான்கு ஆண்டுகளின் பின் சதிப்புரட்சி ஒன்றில் பதவி கவிழ்க்கப்பட்டார்.
நஷீத் தற்போது சபாநாயகராக உள்ளார். இது அந்நாட்டில் இரண்டாவது அதிகாரம் கொண்ட பதவியாகும். இது மாலைதீவு ஜனநாயகம் மற்றும் பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் சோலிஹ் விபரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரவு நேர ஊரடங்கு ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் இரவு 8.39 மணி அளவிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இது நஷீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று மாலைதீவு ஆளும் கட்சி எம்.பி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் பொறுப்பேற்கவில்லை.
நஷீட் பல்வேறு காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை குறிப்பிட்டுள்ளதுடன், குண்டு வெடிப்பு இடம்பெற்று 16 மணித்தியாலங்களாக, தலை, நெஞ்சு, அடி வயிறு, விரல்களில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக, குறித்த வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதலில் நஷீட்டின் மெய்க்காவலர்கள் மற்றும் வீதியில் சென்றவர்கள் என மேலும் நான்கு பேர் காயமடைந்திருந்தனர்.
No comments:
Post a Comment