(எம்.மனோசித்ரா)
கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ள போதிலும், மக்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் கிடைக்கப் பெற்றால் ஜூன் மாதம் ஆரம்பத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என்று கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தரப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் கடந்த இரு வாரங்களாக ஒப்பீட்டளவில் நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படவில்லை.
அத்தோடு இளைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதேயளவான தாக்கம் எதிர்வரும் வாரங்களில் ஒரு வயதை விட குறைந்த குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே குழந்தைகள் தொடர்பிலும் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மேல் மாகாணத்தில் தடுப்பூசி வழங்கப்படும் அதேவேளை கண்டி, குருணாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் தற்போது நாடளாவிய ரீதியில் முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் (17) மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் 42 பிரதேசங்கள் அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
திங்களன்று முழு நேர பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் குறித்த பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜூன் ஆரம்பத்தில் தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சியடையும்
ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் தற்போதுள்ளதை விட ஓரளவிற்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படக்கூடும். ஜூன் மாதம் ஆரம்பத்தில் வீழ்ச்சியடைக்கூடிய கொவிட் பரவலை மக்களின் ஒத்துழைப்பின் ஊடாகவே முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.
எனவே இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்வதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் றோஹண தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு அபாயம்
தற்போது இளைஞர்களுக்கு கொவிட் தொற்று மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக தொற்றுக்குள்ளாகும் பெருமளவானோருக்கு செயற்கை சுவாச கருவிகளை வழங்க வேண்டிய அவசியமாகியுள்ளது. இதே நிலைமை எதிர்வரும் காலங்களில் குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடும் என்று விசேட வைத்திய நிபுணர் சந்தன டி சில்வா தெரிவித்தார்.
ஒரு வயதை விடக் குறைந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுமாயின் தீவிர கொவிட் நிலைமை ஏற்படுவதோடு, அது அவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையும். எனவே குழந்தைகள் தொடர்பில் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் வைத்திய நிபுணர் சந்தன டி சில்வா சுட்டிக்காட்டினார்.
இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
இன்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணி வரை 889 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 36658 ஆக அதிகரித்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் ஒரு இலட்சத்து 10108 பேர் குணமடைந்துள்ளதோடு, 25685 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திங்கள் முதல் தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான்குளம் பொலிஸ் பிரிவில் கிரன்குளம் மத்தி கிராம உத்தியோகத்தர் பிரிவின் வாவிக்கரை வீதி மஞ்சோனாவுக்கு செல்வும் வீதி, நெசவு நிலையவீதி, வேலாப்பிட்டி வீதி, கண்ணகி அம்மன் வீதி கடற்கரை வீதிவரை , வாவிக்கரை வீதி விதானையார் வீதிபகுதி மற்றும் அப்புஹாமி வீதி கடற்கரை பகுதி ஆகிய 6 பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பொலிஸ் பிரிவின் கிண்ணியா, பெரிய கிண்ணியா, குட்டிக்கரச்சி, எஃதார் நகர், பெரியாற்றுமுனை, மாலிந்துறை, ரஹூமானியா நகர், சின்ன கிண்ணியா, மாஞ்சோலை, கட்டயாறு, குறிஞ்சாங்கேணி மற்றும் முனைச்சேனை 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
குருணாகல் மாவட்டத்தில் கிரிஉல்ல பொலிஸ் பிரிவின் ஹமனகல்ல, நாரங்கொட வடக்கு மற்றும் தெற்கு, பட்டபொத்த எல, மல்கமுவ, தொடம்பொத்த, நாரங்கமுவ, வத்தேகெதர, கட்டுகம்பொல, கவுடுமுன்ன, ஹமன்கொட, வேத்தவ, மும்மானா, மாஹரகம, கீழ் மற்றும் மேல் மெத்தபொல, கோதுருவாவெல, மாஹின்கமுவ, சியம்பலாவலான, போபிட்டி, மேல் மற்றும் கீழ் லப்பல, மத்தேகம மற்றும் வெல்லவ ஆகிய 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
திங்களன்று தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்
திருகோணமலை மாவட்டத்தில் உப்புவெலி பொலிஸ் பிரிவின் ஆண்டான் குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவின் சுபத்ரா லங்கா மாவத்தை கவாட்டிகுடா கிராம உத்தியோகத்தர் பிரிவின் விஜயவர்த்தன மாவத்தை ஆகியவை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.
இதேபோன்று களுத்துறையில் தொடம்கொட பொலிஸ் பிரிவின் போம்புவ வடமேற்கு, தென்மேற்கு, வடமத்தி, தென் மத்தி, தென் கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆகிய 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.
வியாழனன்று 24 கொவிட் மரணங்கள்
நேற்று வியாழக்கிழமை மேலும் 24 கொவிட் மரணங்கள் பதிவாகின. தம்புள்ளை, கம்பளை, பொரளை, றாகம, வென்னருவ, காலி, அம்பலாங்கொட, அஹங்கம, மஹகம, கொஸ்வத்தை, கல்கிசை, ஹிந்தகல, கலஹெடிஹேன, வெல்லம்பிட்டி, கோனபல, ரிக்கில்லஸ்கட, ஜயந்திபுர, பொல்கொல்ல, பூண்டுலோயா, நானுஓயா, மடபாத்த, பட்டகொட, போனபல மற்றும் கம்பளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 - 86 வயதுக்கு இடைப்பட்ட 14 ஆண்களும் , 10 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அதற்கமைய நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 892 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment