இலங்கையில் சீரற்ற காலநிலையால் ஐவர் பலி : நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு - ஐந்து நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு - ஆறு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, May 14, 2021

இலங்கையில் சீரற்ற காலநிலையால் ஐவர் பலி : நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு - ஐந்து நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு - ஆறு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலியில் இரண்டு பேரும், வாரியப்பொல, வறக்காபொல மற்றும் பியகம ஆகிய இடங்களில் தலா ஒவ்வொருவரும் சீரற்ற காலநிலை காரணமாக மரணித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அவர்களில் நான்கு பேர் நீரில் மூழ்கி இறந்ததுடன், வறக்காப்பொலயில் மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தென்கிழக்கு அரபிக் கடல் பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடற்பரப்பில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

கடும் மழை, மின்னல் தாக்கம், மண்சரிவு, வெள்ளம் என்பவற்றால் 4 மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு அவிசாவளை பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்தமையால் அந்த வீதியூடாக போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டன.

இந்த சீரற்ற காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கும் நீடிக்கும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நேற்றிரவு வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதோடு பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நேற்று களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை பிரதேசத்தில் 336 மில்லி மீற்றர் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியதோடு, மேலும் பல பகுதிகளில் 150 - 200 மில்லி மீற்றரை அண்மித்தளவில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இவ்வாறு பல பகுதிகளிலும் 150 மில்லி மீற்றரை விட அதிக மழை விழ்ச்சி பதிவாகியதன் காரணமாக பல நீர் தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் பல பிரதேசங்களுக்கும் வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் காரணமாக கொழும்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பிரதேச செயலகப் பிரிவில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 175 நபர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கேகாலை மாவட்டத்தில் வறக்காப்பொல - கஸ்னாவ பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 54 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு குறித்த வீட்டிலிருந்த பெண்ணொருவர் காயமடைந்து வறகாப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு அளுத்வத்தை - உடுகம பிரதேசத்தில் ஜின் கங்கையில் அடித்துச் செல்லப்பட்டு பிறிதொரு நபர் உயிரிழந்துள்ளார். 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடும் மழை காரணமாக ஜின் கங்கையில் நீர் மட்டம் அதிகரித்திருந்த நிலையில் குறித்த நபர் அங்கு நீராடச் சென்றிருந்த போதே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக 5 நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நோட்டன், கெனியன், குக்குலே, உடவளவ மற்றும் தெதுருஓயா ஆகிய நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை மேலதிக பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் 100 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகியது.

கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்தில் நீரியகம, நெலுவ, எல்பிட்டிய, பத்தேகம, தவலம, யக்கலமுல்ல மற்றும் நாகொட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறையில் பாலிந்தநுவர, அகலவத்த, வலல்லாவிட்ட, மத்துகம, தொடங்கொட, இங்கிரிய, புளத்சிங்கள மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறையில் பிட்டபெத்தர பிரதேச செயலக பிரிவு, கேகாலையில் வரகாப்பொல, கொழும்பில் சீதாவாக்க ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், இரத்தினபுரியில் எலபத்த, அயகம, கலவான, குருவிட்ட, நிவித்திகல, இரத்தினபுரி மற்றும் கிரியெல்ல மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண் சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை பிரதான வீதியில் இன்று அதிகாலை பாரிய மண் மேடு சரிந்து விழுந்தது. இதன் காரணமாக கொழும்பு, இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றோர் மாற்று வீதிகளை பயன்படுத்த வேண்டியேற்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் அறிவிக்கப்படும் வரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் கடந்த இரு தினங்களாப் பெய்யும் கடும் மழை காரணமாக மகா ஓயா, அத்தனகல்ல ஓயா மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் சடுதியாக உயர்வடைந்தன.

இன்று காலை மகா ஓயாவின் நீர் மட்டம் 5.39 மீற்றர் வரை உயர்வடைந்திருந்தது. கிரிஉல்ல நீர் மட்ட அளவீட்டு நிலையத்தின் மதிப்பீட்டின் படி 6.50 மீற்றருக்கு நீர்மட்டம் உயர்வடைந்தால் சிறியளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்றும் கடும் மழை தொடரும் பட்சத்தில் குருணாகல் - கிரிஉல்ல வீதி நீரில் மூழ்கக் கூடும் என்றும் நீர்பாச திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் இவற்றின் நீர் மட்டம் மேலும் உயர்வடைவதோடு, தெஹியோவிட் , ருவன்வெல்ல, தொம்பே, சீதாவாக்கை, கடுவலை, பியகம, கொலன்னாவ, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறியளவில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசப் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

எனவே இந்த பகுதிகளிலுள்ள பாதைகளை பயன்படுத்தும் போது மக்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அத்தனகல ஓயாவில் தூனமல பிரதேசத்தில் நீர் மட்டம் 4.29 மீற்றர் வரை உயர்வடைந்திருந்ததோடு, 4.4 மீற்றரை விட நீர் மட்டம் மேலும் அதிகரிக்குமாயின் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கம்பஹா, மினுவாங்கொடை, திவுலபிட்டி, அத்தனகல, ஜாஎல, கட்டான மற்றும் மஹர ஆகிய பகுதிகளில் பாரிய வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதால் மக்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று நீர்ப்பாப்ச திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மழை வீழ்ச்சி 150 மில்லி மீற்றரை விட அதிகரிக்குமானால் களு கங்கை, ஜின் கங்கை, நில்வள கங்கை ஆகியவற்றின் நீர் மட்டங்களும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மழையுடனான காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக நாட்டில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோ மீற்றர் வேகத்திலும், குறிப்பாக வடக்கு , வடமத்திய, வடமேல் மாகாணங்களில் சில சந்தர்ப்பங்களில் 60 கிலோ மீற்றர் வேகத்திலும் வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

அத்தோடு மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

குறிப்பாக மேல், சப்ரமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment