துறைமுக பொருளாதார சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்ள தீவிரமாக செயற்பட்டு வருவதற்கான காரணம் சீனாவின் அழுத்தமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

துறைமுக பொருளாதார சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்ள தீவிரமாக செயற்பட்டு வருவதற்கான காரணம் சீனாவின் அழுத்தமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது - முஜிபுர் ரஹ்மான்

(செ.தேன்மொழி)

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், கொழும்பு துறைமுக பொருளாதார சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்ளவதற்காக தீவிரமாக செயற்பட்டு வருவதற்கான காரணம், சீன பாதுகாப்பு அமைச்சரின் அழுத்தமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹூமான் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வருகின்ற நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறான நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்காக வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான தீர்ப்பு இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளை துறைமுக நகர சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டு, இரு வாரங்களே கடந்துள்ள நிலையில், உடனடியாக வாக்கெடுப்பை நடாத்துவதற்காக அரசாங்கம் முயற்சிப்பதற்கான காரணம் என்ன, நாட்டின் பாதுகாப்பு, சுதந்திரம் உள்ளிட்ட விடயங்களுடன் இந்த சட்டமூலம் தொடர்பு கொண்டுள்ளது. இது தொடர்பில் உலகிலுள்ள பலமிக்க நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன. எமது அயல் நாடான இந்தியாவும் கவனம் செலுத்தியுள்ளது. 

அது மட்டுமன்றி நாட்டு மக்கள் மத்தியிலும் சட்டமூலம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்காமல் எதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அண்மையில் நாட்டுக்கு விஜயம் செய்திருந்த சீன பாதுகாப்பு அமைச்சரின் அழுத்தம் காரணமாகவா துறைமுகநகர சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என்று எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக மக்கள் முயற்சித்து வருகின்றனர். சுகாதார தரப்பினர் உள்ளிட்ட அரச ஊழியர்கள் அனைவரும் வைரஸ் தொற்றிலிருந்து நாட்டை மீட்பதற்காக முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் துறைமுக நகர சட்டமூலம் தொடர்பில் பேசக்கூடிய நிலைமையில் மக்கள் இல்லை. தற்போது வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெருவது தொடர்பிலே மக்கள் அக்கறை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளது. அதனை கருத்திற் கொள்ளாமல் இந்த நெருக்கடிக்கு மத்தியில் துறைமுகநகர சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.

தமது அரசியல் செயற்பாடுகளை பாதுகாத்துக் கொள்வதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிளினால் நாட்டு மக்களே பலியாக வேண்டிய நிலைமை ஏற்படும்.

கேள்வி : கொழும்பு துறைமுக நகர பொருளாதார சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்தால் அரசாங்கத்தால் அதனை பெற்றுக் கொள்ள முடியுமா?

பதில்: மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதில் இம்முறை அரசாங்கத்திற்கு சிக்கலுக்கு முகங்கொடுக்க நேரிடும். ஆளும் தரப்புக்குள்ளே தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த எமது தரப்பைச் சேர்ந்தவர்கள் அதன் பின்னர் பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. அதனால் இம்முறை அரசாங்கத்திற்கு அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

No comments:

Post a Comment