கொரோனா தொற்று ஆரம்பமானதிலிருந்து சட்ட விரோத கைது, தடுத்து வைப்புக்கு எதிராக கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரிப்பு - பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு - News View

Breaking

Post Top Ad

Monday, May 10, 2021

கொரோனா தொற்று ஆரம்பமானதிலிருந்து சட்ட விரோத கைது, தடுத்து வைப்புக்கு எதிராக கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரிப்பு - பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

(எம்.எப்.எம்.பஸீர்)

நாட்டில் கடந்த வருடம், கொரோனா தொற்று பரவல் ஆரம்பமானதை தொடர்ந்து இதுவரை சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 பரவல் காலத்தின் இடையே, கைது நடவடிக்கையின் கீழ் உள்ள நபர்கள் மற்றும் கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு விஷேட கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்தே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஜகத் பாலசூரியவின் கையெழுத்துடன் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமையில், அவ்வாறான உரிமை மீறல்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளுமாறும், கைது செய்யப்படும் அனைத்து சந்தேகநபர்கள் தொடர்பிலும் சட்ட வரையறைக்குட்பட்டு செயற்பட அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ஆலோசனை வழங்குமாறும் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதன் ஊடாக, தடுப்புக்காவலின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள், தமது உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் தற்காலிகமாக வழங்கப்படாமை காரணமாக அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தடுப்புக் காவலின் கீழ் உள்ள சந்தேகநபர்களின் நலன்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், சட்டத்தரணிகளுடன் தொடர்பாடலை முன்னெடுக்க முடியுமான வகையில் செயற்திறன் மிக்க நடவடிக்கை தொடர்பில் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அறிவிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதம் முழுமையாக வருமாறு 

'கடந்த வருடம் ஏற்பட்ட கொவிட் தொற்று பரவல் நிலைமையின் போது (2020.03.17 - 2020.05.15) சட்டவிரோத கைது மற்றும் சட்ட விரோத தடுத்து வைப்பு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடந்த 2020.08.27 அன்று எழுத்து மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த உமது அவதானிப்புக்கள், அவ்வாறான நிலைமையை தவிர்ப்பதற்கு எடுக்க முடியுமான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறும் அதில் கோரப்பட்டிருந்தது.

தற்போதைய புதிய கொவிட் தொற்று பரவல் சூழலில், அவ்வாறான நிலைமை ஒன்று ஏற்படுவதை தடுப்பதற்காக, கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் தொடர்பில் சட்ட ரீதியிலான வரையறைகளுக்கு உட்பட்டு செயற்படுமாறு உமது அதிகாரிகளை தெளிவுபடுத்துமாறு இக்கடிதம் ஊடாக ஆலோசனை முன்வைக்கின்றோம்.

மேலும், இந்நிலைமை காரணமாக, பயணக்கட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, நீண்ட காலமாக தடுப்புக்காவலின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு தாங்கள் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கும், உறவினர்களை சந்திப்பதற்கும் சந்தர்ப்பம் தற்காலிகமாக வழங்கப்படாமையால் அவர்களது பாதுகாப்பு, நலன்கள் கேள்விக்குரியாகியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

அதனால், தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்கள், அவர்களது சட்டத்தரணிகள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பாடலை முன்னெடுக்க உங்களால் முன்மொழியப்படும் செயற்திறன் மிக்க நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் 2021.05.15 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு கோருகின்றோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad