(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கட்சித் தலைவர்களுடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் அப்பேச்சுவார்த்தை இடம்பெறும். தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம்.
கூட்டணியின் பிரதான பங்காளி கட்சித் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் இம்முறையும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுமுன்தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இம்முறையும் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, கம்யூனிய கட்சித் தலைவர் உள்ளிட்ட பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வழமைக்கு மாறான தரப்பினர்கள் கலந்துகொள்வதை காணமுடிகிறது. இதன் காரணமாகவே தொடர்ந்து இரண்டு முறை கட்சித் தலைவர் கூட்டத்தை புறக்கணித்தோம். நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கூட்டத்திலும் அவ்வாறான தன்மையே காணப்பட்டது.
பிரதமர் தலைமையில் ஏற்பாடு செய்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 40 ற்கும் அதிகமானோர் பங்குப்பற்றியிருந்தார்கள். இவ்வாறான நிலையில் கூட்டணியின் உள்ளக பிரச்சினை தொடர்பில் பேசி அதற்க தீர்வு காண முடியாது என தீர்மானிக்கப்பட்டது.
இதன் பிறகு அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, மற்றும் உதய கம்மன்பல உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் பிரதமரை சந்தித்து தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அனுமதி கோரினார்கள்.
ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சித் தலைவர்களை எதிர்வரும் வாரம் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தையினை நடத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
பிரதமருடனான பேச்சுவார்த்தையினை தொடர்ந்து கூட்டணிக்குள் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment