இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் உள்ள இரத்த வங்கிகளில் குருதிக்கான பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், இரத்ததானம் வழங்குவதற்கு முன்வருமாறு பொதுமக்களிடம் தேசிய இரத்த வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
இரத்ததானம் வழங்குமாறு கோரி தேசிய இரத்த வங்கி அதன் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறது.
அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியிருக்கும் நிலையில், நடமாடும் இரத்ததான முகாம்களை அகற்ற வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
எனவே உரிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி, இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்ததானம் வழங்குவதொன்றே தற்போதுள்ள மாற்றுவழியாகும்.
உங்களால் இயலுமானவரையில் நாடளாவிய ரீதியிலுள்ள பிரதான வைத்தியசாலைகளுக்குச் சென்றோ அல்லது இரத்த வங்கியிலோ இரத்ததானம் வழங்குவதென்பது தற்போதைய சூழ்நிலையில் மிகப்பெரிய உதவியாக அமையும்.
குறிப்பாக ராகம, மஹரகம, குருணாகலை மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களிலுள்ள இரத்த வங்கிக்கு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரைக்குள் ஏதேனுமொரு நேரத்தில் சென்று இரத்ததானம் வழங்க முடியும்.
இல்லாவிடின், https://nbts.health/ என்ற இணைய முகவரியின் ஊடாக உங்களுக்குப் பொருத்தமான நேரத்தை முன்பதிவு செய்துகொண்டு இரத்ததானம் வழங்குவதற்குச் செல்ல முடியும்.
அதேவேளை நாரஹென்பிட்டியிலுள்ள இரத்த வங்கி காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை திறக்கப்பட்டிருக்கும்.
சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர்கள் என அனைத்து வயதையும் சேர்ந்த பலர் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ராகம, குருணாகலை மற்றும் அநுராதபுரம் ஆகி பகுதிகளில் உள்ள இரத்த வங்கிகளில் குருதிபெறுவோர் அதிகளவில் இருப்பதால், அங்கு குருதிக்கான கேள்வியும் உயர்வாகக் காணப்படுகின்றது.
அத்தோடு தலசீமியா நோயாளர்களுக்கு 10 - 14 நாட்களுக்கு ஒருமுறை குருதி உட்செலுத்த வேண்டிய தேவையுள்ளது. எனவே எதிர்வரும் வாரங்களில் இரத்த வங்கிக்கு அவசியமான குருதி கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்ப்பதாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment