யாழில் இறந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு : இறந்தவருக்கு கொரோனா உறுதியானதால் இறுதிச் சடங்கில் பரபரப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

யாழில் இறந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு : இறந்தவருக்கு கொரோனா உறுதியானதால் இறுதிச் சடங்கில் பரபரப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாநகரைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு உடனடியாக அன்டிஜன் பரிசோதனை செய்தபோது கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறியப்பட்டுள்ளது. எனினும் பி.சி.ஆர். மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன.

முதியவர் அன்றையதினமே 7ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து 9 ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை முற்பகல் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் சடலம் நேற்று நண்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் நேற்று மாலை வெளியாகிய பி.சி.ஆர். பரிசோதனை முடிவில் அவருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதனால் முதியவரின் உடலை சுகாதார முறைப்படி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்க பணிக்கப்பட்டுள்ளது. இதனால் இறுதிச் சடங்கில் பதற்றமான நிலை காணப்படுகிறது.

No comments:

Post a Comment