ரிஷாட் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதில் சட்ட சிக்கலில்லை என்கிறார் சட்டமா அதிபர் - கலந்துகொள்ள அனுமதி வழங்க வேண்டாமென்கிறார் சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

ரிஷாட் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதில் சட்ட சிக்கலில்லை என்கிறார் சட்டமா அதிபர் - கலந்துகொள்ள அனுமதி வழங்க வேண்டாமென்கிறார் சரத் வீரசேகர

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள, ரிஷாட் பதியுதீன் எம்.பி. பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வது தொடர்பில் எவ்வித சட்ட சிக்கல்களும் இல்லை என, சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் CID யினர் சட்டமா அதிபரிடம் கோரிய ஆலோசனைக்கு அமைய, சட்டமா அதிபர் குறித்த அறிவித்தலை வழங்கியுள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டு, 90 நாள் தடுப்புக் காவல் அனுமதிக்கமைய, தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, ரிஷாட் பதியுதீன் எம்.பியை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்க வேண்டாமென, தாம் கோரிக்கை விடுப்பதாக சபாநாயகரிடம் தெரிவித்தார்.

நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பிலான விடயங்கள் அம்பலமாகலாம் எனவும், இதன் காரணமாக வெளியில் உள்ள குற்றவாளிகள் அதற்கு தயாராகலாம் எனவும், இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் இதன்போது பாராளுமன்றில் தெரிவித்தார்.

பாராளுமன்ற வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி, பாராளுமன்றம் வரும் அவர், தொலைபேசி அழைப்புகள் மூலம் இவ்விடயங்களை வெளியில் அம்பலப்படுத்த வாய்ப்புக் காணப்படுவதாகவும், அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment