3 ஆவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார் மம்தா பானர்ஜி - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

3 ஆவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார் மம்தா பானர்ஜி

இந்தியாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார்.

66 வயதான மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார்.

மம்தாவின் திரிணாமுல் காங்கிரசுக்கு அடுத்தபடியாக பாரதிய ஜனதா கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 தினங்களாக திரிணாமுல் காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவதற்கு சதி செய்து இத்தகைய வன்முறை தூண்டி விடப்பட்டிருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவி ஏற்கும் ஏற்பாடுகள் நேற்று தொடங்கின. கடந்த திங்கட்கிழமை மம்தா பானர்ஜி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஏற்கனவே வகித்து வந்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்து அவர் கடிதம் கொடுத்திருந்தார்.

அதை ஏற்றுக் கொண்ட கவர்னர் ஜெகதிப்தன்கர் தற்காலிகமாக முதல்வர் பதவியை ஏற்கும்படி மம்தாவை கேட்டுக் கொண்டார். மேலும் ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.

இந்த சூழலில், இன்று (05.05.2021) நடந்த பதவியேற்பு விழாவில், 3 ஆவது முறையாக முதல்வராக மம்தா பானர்ஜி கம்பீரமாக பதவியேற்றார்.

கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் இன்று காலை 10.45 மணிக்கு அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தழுவினார். இதனால், ஒரு எம்.எல்.ஏ.வாக இல்லாமல் மம்தா முதல்வராக பதவி ஏற்றார்.

எனினும், இப்படி இவர் பதவியேற்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில், முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்ற போதும் அவர் எம்.எல்.ஏ.வாக இல்லை.

முதல்வராக பதவியேற்ற சில மாதங்கள் கழித்து போவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வென்றது குறிப்பிடத்தக்கது. அதுபோல் இம்முறையும், அவர் மீண்டும் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும்.

தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பதவியேற்பு நிகழ்வு குறைந்த நபர்களுடன் எளிமையாக நடைபெறும் என ராஜ்பவன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், பிற மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

மேற்கு வங்க மூத்தத் தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பீமன் போஸ், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.அபிஷேக் பானர்ஜி, பிரசாந்த் கிஷோர், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோருக்கு இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டமாக அவர் அமைச்சரவையை அமைக்க உள்ளார். இதற்கிடையே மேற்கு வங்கள எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக தற்காலிக சபாநாயகராக பீமன் பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

No comments:

Post a Comment