இலங்கையில் 14 மில்லியன் மக்களுக்கு ஏற்றுவதற்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் எந்த சிக்கலுமில்லை - சீன தடுப்பூசிக்கான அனுமதி கிடைத்தவுடன் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்கிறார் தயாசிறி - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

இலங்கையில் 14 மில்லியன் மக்களுக்கு ஏற்றுவதற்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் எந்த சிக்கலுமில்லை - சீன தடுப்பூசிக்கான அனுமதி கிடைத்தவுடன் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்கிறார் தயாசிறி

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையில் 14 மில்லியன் மக்களுக்கு ஏற்றுவதற்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை எனவும், ரஷ்யாவிடம் இருந்து ஏழரை மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆறு இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சீன தடுப்பூசிக்கான அனுமதி கிடைத்தவுடன் அதனை மக்களுக்கு ஏற்றும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுமென பத்திக் கைத்தொழில் துறைகள், உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜெயசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கொவிட்-19 நிலைமைகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், அரசாங்கமாக பரந்த அளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நிலைமைகளை முறையாக கையாண்டுள்ளோம். 

இன்றும் உலகில் 50 நாடுகள் ஒரு தடுப்பூசியை கூட பெற்றுக் கொள்ள முடியாத அளவில் உள்ளன. ஆனால் நாம் இப்போது வரையில் 9 இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கியுள்ளோம். 

இந்தியாவின் தடுப்பூசிகள் ஆரம்பத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டன. உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூலமாகவும் எமக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. 

அதேபோல் சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசிகளும் நாட்டில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஆறு இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவற்றில் மூவாயிரம் தடுப்பூசிகள் சீனவர்களுக்கு ஏற்றப்பட்டுள்ளன. எஞ்சிய தடுப்பூசிகளும் கைவசம் உள்ளன. தடுப்பூசிகளை பயன்படுத்த முடியும் என்ற அனுமதி கிடைத்தவுடன் அவற்றை நாம் பயன்படுத்த முடியும். 

இன்று காலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் கிடைத்தன. அடுத்த வாரமும், மே இறுதியிலும், ஜூன், அக்டோபர் மாதங்களில் ஏனைய தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவரும் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளன. 

7 அல்லது ஏழரை மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் இந்தியாவின் திடீர் நிலைமையின் காரணத்தினால் எம்மால் ஒக்ஸ்போர்ட் அஸ்டசெனிகா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியாது போய்விட்டது. 

தற்போதுள்ள நிலையில் இலங்கையில் 14 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகளை ஏற்ற வேண்டிய தேவை உள்ளன. அதற்கான வாய்ப்புகள் உள்ளன. எமக்கு சர்வதேச நாடுகளில் ஒத்துழைப்பு கிடைத்து வருகின்ற காரணத்தினால் எம்மால் நிலைமைகளை சமாளிக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment