ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள எஸ்.வி.ஆர் ருயா அரசு மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் ஹரி நாரயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சென்னையில் இருந்து மருத்துவமனைக்கு வரும் ஒக்சிஜன் டேங்கர் வர தாமதமானது. இதற்கிடையில் மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் ஐ.சி.யுவில் வென்டிலேட்டர்களில் இருந்த நோயாளிகளுக்கு ஒக்சிஜனை வழங்க மொத்த சிலிண்டர்களையும் பயன்படுத்தினர்.
இரவு 8 மணி முதல் 8.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது, ஒக்சிஜன் அழுத்தம் பிரச்சினைகள் காரணமாக, வென்டிலேட்டர் ஆதரவில் இருந்த சில கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இது ஐந்து நிமிட இடைவெளியில் நடந்தது. தற்போது ஒக்சிஜன் டேங்கர் வந்து நிலைமை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
சரியான நேரத்தில் ஒக்சிஜன் டேங்கர் வந்ததால் ஒரு பெரிய அளவிலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. இப்போது மற்ற நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
இது தொடர்பான தொழில்நுட்ப பிரச்சினை எதுவும் இல்லை. கூடுதல் ஒக்சிஜன் வழங்கலுடன் மற்றொரு டேங்கர் காலையில் வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விரைந்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக மருத்துவமனையில் மூன்று வார்டுகளில் 573 ஐ.சி.யூ அல்லாத ஒக்சிஜன் படுக்கைகள் உள்ளன. மொத்த சிலிண்டர்களைப் பயன்படுத்தி ஒக்சிஜனை வழங்க மருத்துவமனை ஊழியர்கள் முயன்றபோது ஒக்சிஜன் வழங்கல் தடைபட்டதாக கூறப்படுகிறது
No comments:
Post a Comment