ரிசாத் பதியுதீனின் கைது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை கண்டறிய முடியாத அரசாங்கத்தின் இயலாமையை மறைக்கவே - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 24, 2021

ரிசாத் பதியுதீனின் கைது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை கண்டறிய முடியாத அரசாங்கத்தின் இயலாமையை மறைக்கவே - முஜிபுர் ரஹ்மான்

முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீனின் கைது நடவடிக்கையானது, கடுமையாக கண்டிக்கத்தக்க விடயம் என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

ஒரு சில நபர்களை சந்தோஷப்படுத்துவதற்காகவே ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டிருப்பதாக முஜிபுர் ராஹ்மான் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இன்றி இரவோடு இரவாக வீடு புகுந்து, கைது செய்வதானது ஜனநாயக விரோத செயலாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், உண்மையான சூத்திரதாரி யார் என்பதை கண்டறிய முடியாத அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்காக இந்தக் கைது இடம்பெற்றுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது?

இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்களை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன், சட்டவிரோதமான நடவடிக்கைகளை உடன் நிறுத்திவிட்டு உண்மையான சூத்திரதாரி யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரிசாத் பதியுதீன் அவர்களின் கைது நடவடிக்கையானது முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டதுடன், அரசாங்கம் இன்று எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையையும், மக்களின் உண்மையான பிரச்சினைகளையும் திசை திருப்புவதாகவே அமைந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், தாக்குதலுடன் தொடர்பிருப்பதாக ரிசாத் பதியுதீன் மீதான எந்தக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாத நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

அத்துடன் இந்த சட்டவிரோத கைது நடவடிக்கை மூலம் அரசாங்கத்தின் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகியுள்ளதுடன், இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment