(நா.தனுஜா)
கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்ட மூலத்தின் ஊடாக துறைமுக நகர செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆணைக்குழுவிற்கு வெளிநாட்டவர்களை நியமிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இலங்கை என்பது இறையாண்மை உடைய சுயாதீன நாடாகும். இங்கு வெளிநாட்டவர்கள் தாம் விரும்பியவாறு செயற்படுவதற்கும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் அனுமதிக்கும் வகையிலான சட்டங்கள் உருவாக்கப்படக்கூடாது என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்ட மூலம் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், அதற்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருக்கிறது.
இந்நிலையில் இச்சட்ட மூலம் குறித்து அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து மேலும் கூறியிருப்பதாவது தற்போது பல்வேறு தரப்பினரதும் மனுக்கள் மூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டிருக்கும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்ட மூலமானது இந்நாட்டு மக்களின் இறைமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் இது பிறிதொரு நாட்டிற்கான அரசியலமைப்பாகும். அதன்படி பொருளாதார ஆணைக்குழுவின் கீழ் துறைமுக நகர செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அந்த ஆணைக்குழு ஜனாதிபதியினாலோ அல்லது அவ்விவகாரத்திற்குப் பொறுப்பான அமைச்சரினாலோ நியமிக்கப்படும். எனவே இலங்கையர் அல்லாதோர் அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேலும் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறல் விடயத்தில் நீதியை நிலைநாட்டுவதற்குரிய கட்டமைப்பிற்கு வெளிநாட்டவர்களை நியமிக்க முடியாதெனின், இது விடயத்தில் தீர்மானமெடுக்கும் அதிகாரம் வெளிநாட்டவர்களுக்கு எவ்வாறு வழங்கப்பட முடியும்? அத்தோடு இதன் விளைவாக இறையாண்மை பெரிதும் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.
இலங்கையர்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட முடியாது. அதேபோன்று துறைமுகநகரத்தில் முன்னெடுக்கப்படும் வரிச்சலுகை முறைமைகளைப் பொறுத்த வரையில், அதனூடாக அரசாங்கம் எவ்வாறு பயனடைகின்றது?
ஆகவே நிர்வாகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய விடயங்களில் இந்த சட்ட மூலம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கை என்பது இறையாண்மை உடைய சுயாதீன நாடாகும்.
இங்கு வெளிநாட்டவர்கள் தாம் விரும்பியவாறு செயற்படுவதற்கும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் அனுமதிக்கும் வகையிலான சட்டங்கள் உருவாக்கப்படக்கூடாது. ஆகவே பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அதேவேளை நாட்டின் நிர்வாம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றையும் பாதுகாப்பது அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment