இலங்கையை முதலீட்டுக்கான சிறந்த இடமாகக் கொள்ளுங்கள் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ போவோ மன்ற உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று (20.04.2021) இடம் பெற்ற ஆசியாவிற்கான போவோ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ஆசியாவிற்கான இந்த ஆண்டின் போவோ மன்றத்தின் ஆரம்ப மாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆரம்பத்தில், நாடுகளை ஒன்றிணைப்பதற்கு இரண்டு தசாப்த கால சிறப்பான பணிகளை நிறைவுசெய்திருக்கும் போவோ மன்றத்தை வாழ்த்த விரும்புகிறேன்.
ஆசியாவிற்கான போவோ மன்றத்தில் சீன மக்கள் குடியரசு ஆற்றிய முக்கிய பங்கை அங்கீகரிப்பதற்கும் இந்த வாய்ப்பை நான் பயன்படுத்துகிறேன். பல நூற்றாண்டு கால வளமான வரலாற்றின் ஊடாக, இலங்கையும் சீனாவும் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு வலுவான மூலோபாய ஒத்துழைப்பு கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன.
இலங்கைக்கு நலன் பயக்கும் பல முக்கிய துறைகளில், இலங்கைக்கு மேன்மை தங்கிய ஷி ஜின்பிங் அவர்களும் சீன அரசாங்கமும் அளித்த ஆதரவை நான் பாராட்டுகிறேன்.
இலங்கை ஒரு தெளிவான மற்றும் துடிப்பான வெளியுறவுக் கொள்கையை பேணிவருகிறது, இது அனைத்து நட்பு நாடுகளுடனும், குறிப்பாக, அதன் ஆசிய அண்டை நாடுகளுடனும் சமமான மற்றும் அணிசேரா கொள்கையின் அடிப்படையில் மேம்பட்ட ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறது. இந்த கோட்பாடுகள் எங்கள் ‘சுபீட்சத்தின் நோக்கு’ அபிவிருத்தி கொள்கை சட்டகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனவே உலகளாவிய நிர்வாகத்தையும் சர்வதேச ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளை நான் பாராட்டுகிறேன். சர்வதேச உறவுகளுக்கு மிகவும் சமமான மற்றும் கௌரவமான அடித்தளத்தை நோக்கி நாம் பாடுபடுவது அவசியமாகும்.
தற்போதுள்ள உலகளாவிய கட்டமைப்புகள் மற்றும் ஆட்சிப் பொறிமுறைகள் எப்போதும் மாறிவரும் உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டன, இதன் விளைவாக உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், உலகப் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை பொருட்படுத்தாமல், எண்ணற்ற விதிகள், ஒழுங்கு முறைகள் மற்றும் ஆளுகை கட்டமைப்புகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. ஆனால் அவர்களுக்கு உலகளாவிய விதிகளை உருவாக்கும் செயல் முறையை அணுக முடியாதிருப்பதை நாங்கள் அறிவோம். இது ஒரு வருந்தத்தக்க சூழ்நிலை.
தேசிய கொள்கைகள் மற்றும் சர்வதேச பகிரப்பட்ட கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் விதிகளுக்கு இடையில் நியாயமான சமநிலையை பேணுவது அவசியம். இந்த சமநிலையை பேணுவதில் சுயாதீன அரசுகளின் இறையாண்மையை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
பிராந்தியத்தின் நீண்டகால அபிவிருத்தி அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட பட்டை மற்றும் பாதை (The Belt and Road Initiative) முன்னெடுப்பானது பிராந்திய அரசு மற்றும் அரசு சாராத பங்காளர்களை ஒரு பொதுவான பணிக்காக ஒன்றுபட்டு செயற்பட ஒன்றிணைக்க முடிந்துள்ளது. இத்தகைய முயற்சிகள் பாராட்டத்தக்கவை.
இலங்கை ஒரு அமைதியான, அரசியல் ரீதியாக ஸ்திரமான நாடாகும் என்பதுடன், அது அதன் அபிவிருத்தி கட்டமைப்பின் கீழ் தனது இலக்குகளை பூர்த்தி செய்ய உள்நாட்டு நிர்வாகத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உற்பத்தித் திறன்வாய்ந்த குடிமகன், மகிழ்ச்சியான குடும்பம், ஒழுக்கமான சமூகம் மற்றும் வளமான தேசம் என்ற நான்கு அம்ச பெறுபேறுகளை தரக்கூடிய பத்து கொள்கைசார் துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை வறுமையிலிருந்து உயர்த்துவதற்கும், கிராமப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எமது கல்வித் தரத்தை வளப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் வினைத்திறனை மேம்படுத்த தொழில்நுட்ப பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் நாங்கள் சிறந்த திட்டங்களை வகுத்துள்ளோம். எதிர்வரும் ஆண்டுகளில் எமது பொருளாதாரத்தை கணிசமாக மேம்படுத்தி பலப்படுத்துவதற்கான சிறப்பான திட்டங்கள் எம்மிடம் உள்ளன.
இந்த செயன்முறைக்கு உதவ எங்கள் சர்வதேச பங்காளர்களின் பங்களிப்புகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நாங்கள் கடன் பெறுவதற்கு விரும்பவில்லை, மாறாக முதலீடுகளை ஊக்குவிப்பதற்கே விரும்புகின்றோம். சாதகமான வரி அமைப்பு மற்றும் ஏனைய சலுகைகள் உட்பட வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு கவர்ச்சிகரமான கொள்கைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
இலங்கையை தங்கள் முதலீடுகளுக்கான ஒரு சிறந்த இடமாகக் கருதுவதற்கு தங்கள் நாடுகளிலிருந்து அதிகமான வர்த்தகங்களை ஊக்குவிக்க போவோ மன்றத்தின் உறுப்பு நாடுகளின் அரசாங்கங்களின் ஆதரவை நாங்கள் நாடுகிறோம். ஏற்றுமதி சார்ந்த தொழிற் துறைகளில் முதலீடுகளை ஈர்க்க நாங்கள் குறிப்பாக முயல்கிறோம், அவை எமது பொருளாதாரத்தில் நல்ல விளைவுகளை கொண்டுவரும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
எனது கருத்துக்களை நிறைவுக்குக் கொண்டு வரும் வகையில், போவோ மன்றத்தின் ஒரு ஸ்தாபக உறுப்பு நாடு என்ற வகையில் இம்மன்றத்தின் வழிகாட்டும் கொள்கைகளுக்கும் அதன் நோக்கத்திற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பை நான் உறுதிப்படுத்துகிறேன்.
போவோ வருடாந்த மாநாடு 2021 இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கு இடையிலும் உலகின் ஏனைய பகுதிகளுக்கும் உலகளவில் சவாலான இத்தருணத்தில் ஒரு பயனுள்ள பங்களிப்பை வழங்கும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment