இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்கொள்ளாது..! - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்கொள்ளாது..!

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான போட்டியொன்று நடைபெறும் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும், இலங்கை ஜாம்வான்கள் கிரிக்கெட் அணியானது, இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்கொள்ளாது.

சனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணியினர் இன்று காலை கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டனர். 

இந்த போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்காது. மாறாக தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர்களது அணியே பங்கேற்கவுள்ளது.

இதன்படி, இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும். 

இப்போட்டியை நேரடியாக கண்டுகொள்வதற்கு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள போதிலும், நேரடி ஒளிபரப்பை தொலைக்காட்சி வாயிலான கண்டுகொள்ள முடியும்.

இலங்கை ஜாம்வான்கள் அணியில் 1992 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய அரவிந்த டி சில்வா பெயரிடப்பட்டுள்ள போதிலும், இப்போட்டியில் அவர் பங்கேற்பாரா என இதுவரை உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இலங்கை ஜாம்பவான்கள் அணியில், சனத் ஜயசூரிய (அணித் தலைவர்), அரவிந்த டி சில்வா, உப்புல் தரங்க, உப்புல் சந்தன, சாமர சில்வா, சாமர கப்புகெதர, நுவன் குலசேகர, தம்மிக்க பிரசாத், அஜந்த மெண்டிஸ், மலிந்த வர்ணபுர, சமன் ஜயன்த்த, திலான் துஷார மிரண்டோ, இந்திக்க டி சேரம் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர்களது அணியில் யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவனான விஜயகாந்த் வியஸ்காந்த் மற்றும் கண்டி மதீனா மத்திய கல்லூரியின் பழைய மாணவனான மொஹமட் ஷிராஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.

தசுன் ஷானக்க தலைமையிலான இவ்வணியில் திசர பெரேரா, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ,இசுரு உதான, சதீர சமரவிக்ரம, பானுக்க ராஜபக்ச, ரமேஷ் மெண்டிஸ், விஜயகாந்த் வியாஸ்காந்த், மொஹமட் ஷிராஸ்,தனஞ்சய லக்சான், அஷேன் பண்டார, ஷிரான் பெர்னாண்டோ, மஹேஷ் தீக்சன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad