கல்முனை சுகாதார பிரிவில் உணவு கையாளும், விற்பனை நிலையங்களை மூட நடவடிக்கை - வைத்திய சுகுணன் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 15, 2021

கல்முனை சுகாதார பிரிவில் உணவு கையாளும், விற்பனை நிலையங்களை மூட நடவடிக்கை - வைத்திய சுகுணன்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் போன்றவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

தற்போது நோன்பு காலம் ஆகையால் வீதியோரங்களில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது. அங்கு சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லையென அறியக்கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் முகக் கவசம், கையுறை போன்றவற்றை பாவிக்க வேண்டுமென கேட்டுள்ளார்.

பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை ஆகிய நகர் பிரதேசங்களிலுள்ள உணவு கையாளும் நிலையங்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருவதாதவும், இதன் போது உணவகங்கள் மற்றும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள், உணவு பரிமாறுவோர் ஆகியோருக்கு சுகாதாரம் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவருவதாகவும் கூறினார்.

உணவு சட்ட விதிமுறைகள், நுகர்வோர் விவகார சட்டங்கள் மற்றும் அதன் விதிமுறைகளுக்கு அமைய வேண்டுமெனவும், உணவு தயாரிப்போர், உணவு விநியோகிக்கும் இடம், பயன்படுத்தும் உபகரணம் போன்றவற்றின் தூய்மையை உறுதிப்படுத்தல், அதிக எண்ணெய், அதிக சீனி, அதிக உப்பு கொண்ட உணவுகளை விற்காதிருத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு சட்டதிட்டங்களை மீறுபவர்களுக்கெதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதோடு, பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் கண்டுபிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்நிலையங்கள் மூடப்படுமெனவும் மேலும் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபா் - எம்.எஸ்.எம். ஹனீபா )

No comments:

Post a Comment