அமெரிக்காவில் கருப்பின வாலிபரை சுட்டுக் கொன்ற பெண் பொலிஸ் உட்பட தலைமை அதிகாரி ராஜினாமா - News View

About Us

About Us

Breaking

Thursday, April 15, 2021

அமெரிக்காவில் கருப்பின வாலிபரை சுட்டுக் கொன்ற பெண் பொலிஸ் உட்பட தலைமை அதிகாரி ராஜினாமா

வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெண் பொலிஸ் அதிகாரியால் கருப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து புரூக்ளின் சென்டர் நகரில் பெரும் போராட்டம் வெடித்தது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் புரூக்ளின் சென்டர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் டான்ட் ரைட் (வயது 20) என்ற கருப்பின வாலிபரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டனர். 

அப்போது அவர் பொலிஸாரின் பிடியில் இருந்து நழுவி காரில் தப்பிச் செல்ல முயன்ற போது, பெண் பொலிஸ் அதிகாரியான கிம் பாட்டர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெண் பொலிஸ் அதிகாரியால் கருப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து புரூக்ளின் சென்டர் நகரில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் வன்முறைகள் அரங்கேறின.

இதனிடையே டான்ட் ரைட் கொல்லப்பட்டது ஒரு விபத்து என்றும், பொலிஸ் அதிகாரி கிம் பாட்டர் எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் 'டாசர்' துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு பதில் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதாகவும் புரூக்ளின் சென்டர் நகர பொலிஸார் தெரிவித்தனர்.‌

ஆனாலும் மக்கள் இதனை ஏற்க மறுத்து, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.‌

இந்த நிலையில் டான்ட் ரைட்டை சுட்டுக் கொன்ற பெண் பொலிஸ் அதிகாரி கிம் பாட்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து புரூக்ளின் சென்டர் நகரின் தலைமை பொலிஸ் அதிகாரியான டிம் கேனனும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.‌ 

இவர்களின் முடிவு போராட்டத்தை தணித்து சமூகத்தில் அமைதியை கொண்டுவர உதவும் என புரூக்ளின் சென்டர் நகர மேயர் எலியட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment