தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெல்லும் : புதிய கருத்துக் கணிப்புகளில் தகவல் - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெல்லும் : புதிய கருத்துக் கணிப்புகளில் தகவல்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 6ஆம் திகதியன்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. 

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதால், தமிழகத்தில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் திகதியன்று எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகுதான் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம் என தேர்தல் ஆணையம் விதிமுறையை அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் மேற்குவங்கத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதன் பிறகு தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 160 முதல் 170 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என சில கருத்து கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. 

ரிபப்ளிக் பீப்பிள் நெட்வொர்க் மற்றும் சி என் எக்ஸ் ஆகிய அமைப்புகள் நடத்திய வாக்குப்பதிவு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 160 முதல் 170 இடங்களிலும், அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 58 முதல் 68 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், அ.ம.மு.க மற்றும் தே.மு.தி.க கூட்டணிக்கு 4 முதல் 6 இடங்கள் கிடைக்கும் என்றும், மக்கள் நீதி மையம் இரண்டு இடங்களில் வெற்றி பெறக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது. 
பி மார்க் என்னும் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க கூட்டணி 165 முதல் 190 இடங்கள் வரை பிடித்து ஆட்சி அமைக்கும் என்றும், அ.தி.மு.க கூட்டணி 40 முதல் 65 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், அ.ம.மு.க - தே.மு.தி.க கூட்டணி 1 முதல் 3 இடங்கள் வரை பிடிக்கும் என்றும், மக்கள் நீதி மையம் ஒன்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது. 

இதேபோல் ஏபிபிசி வோட்டர் என்னும் நிறுவனம் நடத்திய வாக்குப்பதிவு பிந்தைய கருத்துக் கணிப்பில் தி.மு.க கூட்டணி 160 முதல் 172 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், அ.தி.மு.க கூட்டணி 58 முதல் 70 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், மக்கள் நீதி மையம் மற்றும் அ.ம.மு.க கூட்டணி தலா இரண்டு இடங்கள் வரை வெற்றி பெறக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது.

வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்திருப்பதால் தி.மு.கவினர் உற்சாகமாக இருக்கிறார்கள். இருப்பினும் மே இரண்டாம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பின்னரே உறுதியான மற்றும் இறுதியான முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment